Sunday 6 May 2012

சொல்ல மறந்தவை..


"ஓட்டை பெரியார் ஓட கூடவே ஒடுகிறது செப்டம்பரின் ஓர் இரவு ",

ம்ம்ம் ஒட்டவில்லையே....கண்றாவி..

"பெரியார் முன் செல்ல எனக்காக பின் செல்கிறது நினைவுகளோடு மரங்களும் வீடுகளும்",

ஆஹா.. கவித..கவித..

" அட சொறி புடிச்ச மொன்ன நாயே",

 மொபைலில் ரிங்க்டோன் அலறியது,திடிக்கிட்டு விழித்தான் சண்முகம்.வலதுப்பக்கம் கல்லூரி இளைஞர்கள் மொபைலில் இருந்துதான் வருகிறது.இப்படியெல்லாமா ரிங்க்டோன் வைப்பார்கள்.

வருவதும் கலைவதுமாக இருந்தது தூக்கம்.

சென்னைக்கு செல்லும்போதெல்லாம் தன்னுடைய முதல் சென்னை அனுபவத்தை அசைபோட்டபடியே செல்வது வழக்கம்,சண்முகத்துக்கு.

             கல்லூரி முடித்துவிட்டு ஒன்றிரண்டு தேர்வுகள் சென்னைக்கும்,சென்னை ராசியில்லை என்று திருச்சிக்கும் சென்று இரண்டு தேர்வுகள் எழுதி ஒன்றும் கைகூடிவரவில்லை,மங்களகரமானதொரு ஞாயிறு நாளில் மூட்டை முடிச்சிகளை கட்டிக்கொண்டு சென்னை வந்து இறங்கியாகிவிட்டது.

           சென்னையில் சைதாப்பேட்டையில் நண்பர்கள் அறையில் தங்குவதாக முடிவு.இரண்டு பேர் சண்முகத்தின் வகையராக்கள் மற்ற இரண்டு பேர் மென்பொருள் கம்பெனி ஒன்றிலும் வேலை.முதல் மூன்று நாள் ஆர்வக்கோளாரின் காரணமாக பக்கத்து கடையில் எம்ப்ளாய்மென்ட் நியூஸ் வாங்கி வரிக்கு வரி விளம்பரங்களை படித்து பேனாவால் கோடு போட்டு,இன்டர்நெட்டில் தேடி,அன்று செல்ல போகும் நேர்காணல் பட்டியலை குறிப்பு எடுத்துக்கொண்டு,காலை எட்டு மணிக்கே அறையை விட்டு கிளம்பி பின் இரவு ஒன்பது மணிக்குதான் அறைக்கு திரும்ப வேண்டியது,

"புதுசில்ல அப்டித்தான் இருக்கும் ,போகப் போக சரியா ஆயிடும்" என்றான் நண்பன் ஒருவன்.

மூன்று மாதம் ஆகிறது சென்னை வந்து ஆரம்பத்தில் வேலைத் தேடி அலுத்து பின் கம்ப்யூட்டர் கோர்ஸ் ஒன்றில் சேர்ந்து படித்து கொண்டிருக்கிறான்.

"கான்ஃபிடன்ட் இல்லாத பாய்ஸ்" என்று நினைத்துக்கொண்டான் சண்முகம்.

      துறை சார்ந்த வேலை என்றால் அனுபவம், சிபாரிசு இருந்தால்தான் கிடைக்கும்போல மென்பொருள் கம்பெனியில் சேர விருப்பமில்லை.அந்த சூழ்நிலையே ஒவ்வாமையாக இருந்தது சண்முகத்துக்கு.போய்தான் பார்ப்போமே என்று ஒரு நேர்காணலுக்கும் நண்பன் ஒருவனோடு சென்று பார்த்தான். மொத்த கம்பெனியே நான்கு குளிரூட்டப்பட்ட அறைகள்தான்.பதினைந்து பேர் வந்திருந்தார்கள்,நேர்காணலுக்கு.எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றால் பின்பயிற்சி கொடுக்க இருபத்தைந்தாயிரம், ஆறு மாத காலம் பயிற்சி என்று ஆங்கிலத்தில் சரளமாக பேசிக்கொன்டிருந்தாள் ஒரு பெண்,அழகாகத்தான் இருந்தாள்,

"சரியான கட்டை " என்று பின்னால் முனுமுனுப்பு.

                ஒன்றிரண்டு ஆண்கள் தவிர முற்றிலும் பெண்கள்தான்,இறுக்கமாக டீ ஸ்ர்ட்,ஜீன்ஸ்,எத்தனை வளைவுகள் என்று எண்ணிவிடலாம் போல,உதட்டு சாயம்,இமைகளுக்கு கருப்பு மைகளோடு கடக்கும்போது ஆங்கிலத்தை நுனி நாக்கில் உதிர்த்து கொண்டே சென்றார்கள், வெளிநாட்டு வகை நாற்ற மருந்து குப்பென்று வீசியது, காமத்தையும் தெளித்து கொண்டு போவார்கள் போல ,இங்கு என்ன வேலை செய்யவா தோன்றும்?இதுவே இப்படியென்றால் அந்தகாலத்தில் மன்னர்களின் அந்தபுறம் எப்படி இருந்திருக்குமோ,

"இருபத்தைந்தாயிரம் கொடுக்கலாம்தான்".

 நான்கு நாட்கள் இப்படியாக நகர்ந்தது,"என்னத்த போயி " என்றிருந்தது.அதற்கு பின்னான நாட்கள் ஊர் சுற்றுவதிலும்,மீதி நேரம் மெரினா கடற்கரையிலும் கழிந்தது.

            கடல் சண்முகத்துக்கு எப்போதுமே பிடிக்கும்,அதன் பிரம்மான்டத்தை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்போல தோன்றும்,முதன்முதலில் பள்ளிச்சுற்றுலா செல்லும்போது பார்த்து பிரமித்துப்போய் நின்றான்,மற்றவர்கள் அலையொடு விளையாடிக் கொண்டிருக்க விலகி நின்றே ரசித்துக்கொண்டிருப்பான்.

    எட்டு வருடங்களுக்குப் பின் இரண்டாவது முறை கடலுக்கு சென்றபோது பிரிந்து கூடிய நண்பர்கள் போல் குதூகலத்தில் கடலில் இறங்கி நேரம் போவது தெரியாமல் விளையாடினான்.அன்று முதல் கடல் அவனுடன் உரையாடும் நண்பன் போலாகிவிட்டது. சிதம்பரத்திலிருந்து இருபது மைல்கள் இருக்கும் கடல்,நேரம் கிடைக்கும்போதெல்லாம் செல்லத் தவறியதில்லை.

      கல்லூரி முடிந்து கடைசியாக பார்த்தது,இப்போது மீண்டும் இங்கு.பார்த்துக்கொண்டே இருந்தான்.

"பாத்து சுனாமி வந்து தூக்கிடபோகுது வா போகலாம் " என்று நண்பன எழுப்பினான்.

பேன்டை தட்டிக்கொண்டு புறப்பட்டான்.அறையிலும் அவ்வபோது நண்பர்களிடம் அரட்டை அடித்துக்கொண்டு இரண்டு வாரங்கள் கழிந்தது.நம்பிக்கையின் பிடி சற்று தளர்வது போல் தெரிந்தது.

                   வெள்ளிக்கிழமை ,வெளியில் செல்லும் எண்ணமில்லை,நண்பர்களும் ஒண்பது மணிக்கெல்லாம் கிளம்பிவிட்டார்கள்.காலை சாப்பாடு ஏதுமில்லை.சென்னை வந்ததலிருந்து காலை சாப்பாடு எப்போதாவது கிளம்பும்போது பக்கத்து பஸ்டான்ட் டீ கடையில் வடை,பஜ்ஜி இரண்டு மட்டும்தான்.

      பத்துமணிவரை படுக்கையில் படுத்து விட்டத்தை பார்த்து வெறித்துகொண்டிருந்தான்,வெளியே கடைக்கு சென்று விகடன் வாங்கினான்,அரை மணி நேரம் புரட்டிவிட்டு தூக்கிஎறிந்தான்,முன்புபோல இப்போதெல்லாம் விகடன் படிக்க பிடிப்பதில்லை ஒன்றிரண்டு ஜோக்குகள்,துணுக்குகள் தவிர.தேவையில்லாத நடிகைகள் பேட்டி அவர்களின் அந்தரங்கம், அரசியில்வாதிகளின் குடும்ப விரிசல் இதெல்லாம்தான் இப்போது விகடனில், திரைவிமர்சனம் எரிச்சல் தருவது,எந்த படத்திற்குதான் இவர்கள் நூறு மார்க் போடுவார்களாம், அறிவுஜீவிகளாக தங்களை  நினைத்துக்கொள்வார்கள் போல.

  தனிமை என்னவோபோல் இருந்தது.தனிமை புதிதில்லை , இருந்தாலும் இந்த நகரத்தில் வாழ்க்கையின் இந்த மாதிரி நெருக்கடியான தருணத்தில் தனிமை என்பது கொடுமைதான்.அலமாரியில் சிகிரெட் பாக்கெட் இருந்தது,பிடிக்கும் பழக்கமில்லை,கற்றுக்கொள்ளலாம்,ஒன்றை எடுத்து பற்ற வைத்து,இழுத்தான்,ஒன்றும் மாற்றமில்லை,மறுபடியும் இழுத்தான்

"நல்லா புகைய உள்ள இழுத்து உள்ள கொஞ்ச நேரம் வையி அப்புறம் பாரு" கல்லூரியில் நண்பன் ஒருவன் சொன்ன நினைவு.

     நன்றாக இழுத்தான்,கண்களில் தண்ணீர் வர இருமியதுதான் மிச்சம்,அதற்குள் கை சுட்டுவிட்டது, அடுத்த சிகரெட் ஒன்றை பற்ற வைத்தான்,இழுத்தான்,இதுமாதிரி தனிமையாக இருக்கும் சமயங்களில் சண்முகத்துக்கு தத்துவம் பொங்கியெழும்,அவை பெரும்பாலும் தன் இருப்பை,செயலை ஞாயப்படுத்துவதற்க்காக எழுந்த சிந்தனை,இப்போதும் எழாமலில்லை.

 வேலை கிடைப்பது என்ன அவ்வளவு கடினமா இந்த தாராளமய உலகில்,இல்லைதான்,நினைத்தால் எதையாவது பிடித்து பிழைத்துக்கொள்ளலாம்,எதை பிடிப்பது,பதினைந்து வருடங்களுக்கு மேலாக புத்தகத்தையே நம்பி இருந்தாகிவிட்டது,படிக்காமல் இருந்தாலாவது வேறு தொழில் கற்றிருக்கலாம்.

          திருடலாம்,கொள்ளையடிக்கலாம்,பிறர் காலை பிடித்து பிழைக்கலாம்,ஏய்க்கலாம்,எதையும் விற்கலாம் ஆனால இதைத்தான் விரும்புகிறதா இந்த சமூகம்,இப்போது தமிழ்நாட்டில் பெரும் பணக்காரர்களில் முக்காலவாசி மேற்சொன்னவற்றை செய்து வந்தவர்கள்தானே.ஆனால் நமக்கு அப்படியா சிறு வயதிலிருந்தே அறம் ஊட்டப்படுகிறது,தார்மீக அறிவியலும்,தொழில்முறை நெறிமுறைகளும் போதிக்கப்படுகிறது,இன்னது தவறென்றும்,ஈனத்தனமானது என்றும் தெரியப்படுத்துகிறார்கள்.அதை மீறி செய்ய உள்ளம் கூசுகிறது.அப்படியே செய்தாலும் விட்டுவிடுமா சட்டம்.அவர்களுக்கு சட்டம் கிடையாது அவர்கள் இயற்றுவார்கள்,நாம் அதை பின்பற்ற வேண்டும் .வெற்றி பெற்றவர்கள் சேர்ந்து அவர்களுக்காக செய்வதுதான் சட்டமா? தெளிவாகாதுதான்.குழப்பமதான். தனியாக காட்டில் வாழ்வதென்றால் இதெல்லாம் தூக்கி தூர எறியாலாம்.

           திருடவும் முடியாது,கூலி வேலையும் செய்ய முடியாது,மெண்பொருள் கம்பெனி என்றால், சட்டையை இழுத்து பேன்டுக்குள் விட்டு,டை,ஷூ போட்டுக்கொண்டு கணினி முன் உட்க்கார்ந்து கொண்டு,அந்த சூழ்நிலையை நினைத்தாலே கிலியாக இருக்கிறது.இதெயெல்லாம் மனதில் போட்டுக்கொண்டு தனக்கு தகுந்த மாதிரியும்,வெளியில் மிடுக்குடனும்,தன்மானத்துடனும் வாழ வகை செய்யமாறு ஒரு வேலை கிடைக்க வேண்டும்.கொஞ்சம் கடினமதான்.

           சிகரெட் பாக்கெட் முழுவதும் காலியாகிவிட்டது,அறைமுழுவதும் புகையாக இருந்தது, மூச்சுத்திணரல் வரும்போல.எழுந்து வாசற்க்கதவை திறந்தான்,வயிறு கர் முர் என்று கத்திக்கொண்டிருந்தது.காலை பட்டினி காரணமாக இருக்கலாம்.பக்கத்து ஹோட்டலில் சிக்கன் பிரியாணி சுவையாக இருக்கும்,சாப்பிடலாம்.சட்டை பேன்ட் போட்டுக்கொண்டு அறையை பூட்டிவிட்டு ஹோட்டலுகு நடந்தான்.

                கொஞ்சம் பெரிய ஹோட்டல்தான்,கூட்டம் நிரம்பி வழிந்தது,பிரியாணி ஆர்டர் செய்து வெகுநேரம் கழித்து ப்ளேட்டில் பெரிய கோழித்துண்டில் சாதத்தை தூவி எடுத்து வந்தான் சர்வர்,சாதமும் பாதி வெந்ததும் வேகாததுமாய் இருந்தது,வயிறு நிரம்பவில்லை மூன்று டம்ளர் தண்ணீர் குடித்தான்,எண்பது ரூபாய் பில்,மேலும் ஆர்டர் செய்து சாப்பிடலாம்,இந்த நெருக்கடியில் ஒரு வேளைக்கு எண்பது ரூபாய் அதிகம்தான்,புல் மீல்ஸ் சாப்பிட்டிருந்தால் மிச்சம்.ஏதொ முடிவுக்கு வந்தவன் போல் இன்னொரு பிரியாணி அர்டர் செய்தான்,சாப்பிட்டு முடித்து வெளியில் வந்தான் மணி ஒன்று காட்டியது.நான்கு நாட்கள் சாப்பாட்டு செலவை ஒரே நாளில் செலவு செய்தாகிவிட்டது.

                வானம் ஒருமாதிரி மந்தமாக இருந்தது,அறைக்கு செல்லும் விருப்பமில்லை.ரயில் நிலையம் வரை நடக்கலாம்.சற்று கூட்டமாகவே இருந்தது,மக்கள் வேகமாக நடந்தார்கள்,என்ன அவசரமோ? ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்து நடந்தான்,நகர் பகுதிக்குள் நடந்தான்,குடியிருப்புகள் பெருகியிருந்தது,ஒரு வீட்டுக்கும் இன்னொரு வீட்டுக்கும் இடைவெளியில்லாமல் கட்டியிருந்தார்கள், இந்த வீடுகள்,குடியிருப்புகள் கட்டும்போதே இந்த மனிதர்களையும் சேர்த்து கட்டியிருப்பார்களோ,ஒருவர் முகத்திலும் மனிதனுக்குறிய குனாதிசயங்களையே காணோம்.

        ஒரு மரத்தை கூட பார்க்கமுடியவில்லை, குரோட்டன்ஸ்,சில பெயர் தெரியாத அலங்கார செடிகள் தவிர.இலக்கின்றி நடந்தான்,கூடவே தன்னை பொருட்படுத்தாது கடந்து வேகமாக நடந்தார்கள் மனிதர்களும்.அவர்களுக்கென்ன நிலைமையோ தன்னைப்போன்று.

              மணி இரண்டுதான் ஆகியது.வந்த பாதையிலெயே சென்றால் சீக்கிரம் அறை வந்துவிடும் அதனால் வேறு சுற்றுப்பாதையில் நடந்தான்,மீண்டும் ரயில நிலையம் வந்து சற்று அமர்ந்தான்.என்ன இந்த தனிமை என்னை சோதித்து பார்க்கிறதா? எவ்வளவு தூரம் என்று பார்த்துவிடுவோம்.களைப்பாக இருந்தது,எழுந்து அறைக்கு நடந்தான்.சற்று கண் மூடலாம் நன்றாக தூக்கம் வரும்போல் தெரிந்தது.

                        சட்டை பேன்டை கழற்றிவிட்டு ,கைளி ஒன்றை கட்டிக்கொண்டு படுக்கையில் சாய்ந்தான், தொலைகாட்சியை போட்டு,சானலை மாற்றிக்கொண்டே இருந்தான், தமிழ் சானல் ஒன்றில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது,தலைப்பு "பெண்கள் அரைகுறை ஆடை அணிவதை பற்றி " கார சாரமாக நடந்து கொண்டிருந்தது.

"ஆடை அணிவது அவரவர் சொந்த விருப்பம்,அதில் அடுத்தவர்வர்கள் எப்படி தலையிடலாம்" என்று பெண்கள் தரப்பில்.

"சரிதான்,ஞாயம்தான்"

"பெண்கள் இதுமாதிரி ஆடைகள் அணிவதால்தான்,ஈவ்டீசிங்க் நடக்கிறது,டைட் ஷர்ட் போட்டுக்கொண்டு பீச்சில் ஓடுவது ஆண்களை தூண்டுகிறது" என்று ஆண்கள் தரப்பில் ஒருவன் பேச"

அதற்கு "அக்கா தங்கையாக இருந்தால என்ன செய்வீர்கள் என்று எதிர்தரப்பில் கேள்வி வருகிறது,சற்று நேரம் மௌனம்,பின் கைதட்டல்.

நல்ல கேள்விதான்,ஆனால் பெண்கள் தங்களை அக்கா தங்கையாக நினைக்க வேண்டுமென்றா அந்த மாதிரி ஆடை அணிகிறார்கள்,சினிமாவில் ஆடையை அவிழ்த்துப்போட்டு "கட்டிப்புடி கட்டிப்புடினு பாடுகிறவளை அக்கா தங்கையாகவா நினைக்க முடியும்.என்ன ஒரு அபத்தமான கேள்வி.

               சானலை மாற்றினான்,கில்மா பாட்டு ஒன்று ஓடிக்கொண்டிருந்தது,பார்த்து ரசித்தான்.தூக்கம் வரும்போல் இருந்தது,தொலைக்காட்சியை அணைத்துவிட்டு புத்தகம் ஒன்றை எடுத்து புரட்டினான்.
மல்லாக்க படுத்து புத்தகத்தால் முகத்தை மூடி சற்று கண்மூடினான்.

           இரண்டு நிமிடம் இருக்கும்,திடீரென்று மூச்சுவிட மறந்ததுபோல் திணறல் ஏற்பட்டு விழித்துக்கொண்டான், மூச்சுத்திணறல்தான் புத்தகத்தால முகத்தை மூடியதால் இருக்கலாம்.

             நெஞ்சு அடைப்பதுபோல் இருந்தது,முகம் வியர்த்தது,பதற்றம் அடைந்தவனாக எழுந்து உட்க்கார்ந்து மூச்சை நன்றாக இழுத்து விட்டான்,வெளியே வந்தான்,பிரியாணியின் வேலையாக இருக்குமோ,இதயத்தில் கை வைத்து பார்த்துக்கொண்டான்,சீராகத்தான் இருந்தது.கல்லூரியில் படித்துகொண்டிருக்கும்போது நண்பனின் பள்ளித்தோழன் ஒருவன்,இருபத்தி ஒன்று வயதுதான் இருக்கும்,மதியம் மட்டன் மூக்குப்பிடிக்க சாப்பிடுவிட்டு படுத்தவன்தான்,எழுந்திருக்கவே இல்லை,மாரடைப்பு என்று மருத்துவர்கள் சொன்னது ஏனோ நினைவுக்கு வந்தது.இந்த வயதிலா ஏற்படும்?

          போனவாரம் பக்கத்து வீட்டு பெரியவர் ஒருவர் இறந்துவிட்டார்,குளிக்க்கும்போது கால் வழுக்கி,மண்டை அடிப்பட்டு.அழுகை சப்தமே இல்லை, சடலத்தை எலக்ட்ரிக் சுடுகாட்டில் எரித்துவிட்டு மாலையில் சகஜ  நிலைக்கு திரும்பிவிட்டார்கள்.ஊர்பக்கமாக இருந்தால் இரண்டு நாள் உடலை வைத்திருப்பார்கள், ஒப்பாரி சத்தம் ஊரையே தூங்கவிடாது,எங்கிருந்தெல்லாம் வருவார்கள் வண்டிக்கட்டிகொண்டு.வாழும்போது எப்படி வாழ்ந்தாரோ,போகும்போது ராஜாவாகத்தான் போவார்.

"எப்படி வேண்டுமானாலும் மரணம் நிகழலாம்,ஆனால் இந்த நகரத்தில் மட்டும் வேண்டாமப்பா"

                             ஏன் இந்த வீண் பயம்,இதற்கு முன் இப்படி ஏற்ப்பட்டதில்லையே, அறைக்குள் வந்து கை கால்களை ஆட்டி லேசான உடற்பயிற்சி செய்து பார்த்தான், மூச்சு விடுவதில் சிரமமில்லை,உட்க்கார்ந்தான்,  ஒருவேளை மாரடைப்பாகவே இருந்தால்? ஏன் இந்த வயதில் இப்படி ஒரு எதிர்மறையான எண்ணங்கள்? என்ன நடந்தாலும் சரி என்று தேற்றிக்கொண்டு,எழுந்து கதவையும்,சன்னலயும் திறந்துவிட்டான், இப்படியே சாக விருப்பமில்லை , காலையில் உடலை எடுக்கும்போது துணி தொடைக்கு மேல் விலகி பனியன் மேலேறி தொப்பை பிதுங்கி போட்டா எடுத்து தொலைக்காட்சி சானலில் ஒளிபரப்புவார்கள் "பூட்டியிருந்த வீட்டில் வாலிபர் சடலம் , கொலையா? தற்கொலையா?". சிரிப்பு வந்தது சண்முகத்துக்கு,மணநிலை பாதித்துவிட்டதோ?

            எழுந்து சட்டை பேன்ட் அணிந்து,தலையை எண்ணெய் தடவி வாரிக்கொண்டு,பவுடர் போட்டுக்கொண்டு வந்து படுத்தான்.பிணம் எவ்வளவு அழகாக இருக்கிறது என்று சொல்வார்களா என்ன?உலக அழகியாகவே இருந்தாலும் இறந்த பின் பிணம்தானே.எப்போது தூங்கினான் என்று தெரியவில்லை,ஐந்து மணி சூரியன் முகத்தில் அடித்து எழுப்பிவிட்டது,கிள்ளி பார்த்துக்கொண்டான்,

"உயிரோடுதான் இருக்கிறோம்,சாகவில்லை,அஜீரணக்கோளாராக இருக்கலாம்".

வெளியே சென்று சுற்றும் முற்றும் பார்த்தான்.உண்மையில் மரணம்தான் நிகழவிருந்ததா?இல்லை..
       
என்ன இந்த மனம் நிலையாக இல்லையே,மூன்று வருடங்களுக்கு முன்பு சுற்றுலா வந்த போது பார்த்த சென்னை இது இல்லை,ஒரே மனிதனுக்கு ஒரே உலகம் வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு விதமாக காட்சியளிப்பது என்ன விந்தை?காட்சிப்பிழையா ,"மண்ணாங்கட்டி" பணப்பிழை, கையில் வீட்டில் கொடுத்த பணமும்,கல்லூரியின் பாதுகாப்பிலும் நண்பர்களுடன் சென்ற சுற்றுலா அது.சுற்றுலா சென்றவனுக்கும்,அதே இடத்தில் பஜ்ஜி போட்டு பிழைப்பு நடத்துகிறவனுக்கும் வித்தியாசம் இல்லையா என்ன?

யதார்த்தம் மனிதனை என்றுமே பயமுறுத்திக் கொண்டுதான் இருக்கிறது.தான் நினைக்கும் உலகம்தான் நேரிலும் இருக்கிறது என்று திடமாக நம்புகிறான், அது பொய்யாகும்போது விலகி ஓடி தன் செயலை ஞாயப்படுத்த பொய்களை தத்துவமாக புனைகிறான். உண்மை நிர்வாணமாக காட்சியளிக்கும்போது ஏற்க மறுக்கிறான்.

போதும் தத்துவம்,சலிப்பாக இருந்தது.யதார்த்த உலகை கண்டு பயப்படுகிறவனாகவே இருக்கட்டும், என்னவாயிருந்தாலும் சரி,

ஒரு முடிவுக்கு வந்தவனாக,

கொடியில் தொங்கிய ஆடைகள்,அலங்கார பொருட்கள்,புத்தகங்கள் இதர பொருட்களையும் எடுத்து பையில் வைத்தான்.முகம் கழுவி ஒப்பனை செய்து நண்பர்கள் வரும்வரை காத்திருந்து,அவர்களிடம் அடுத்த வாரம வருகிறேன் என்று சொல்லிவிட்டு சைதாப்பேட்டை ரயில்நிலையம் நோக்கி நடந்தான்.

       சென்னைக்கு வரும்போது இருந்த பாரத்தை விட இப்போது சற்று அதிகமாக இருப்பதுபோல் தோன்றியது,உடல் மெலிந்துதான் இருந்தது,பின் துணிப்பையின் கணமா? இல்லை,வேறு ஏதோ.ரயிலேறி தாம்பரம் இறங்கி சிதம்பரம் பேருந்துக்காக காத்து நின்றான்.

பேருந்து வந்து நின்றது,ஏறிக்கொண்டான்.