Monday 10 December 2012

வாலி வதைப் படலம்


காலேஜ் படிக்கறப்ப நண்பர்கள் சில பேர தெரியும் எப்டின்னா அவங்க வாழ்க்கையில ஒவ்வொரு விசயத்தையும் பெரிய திட்டம் போட்டுத்தான் செய்வாங்க, எதிர்காலம் பற்றிய பெரிய கனவுகளோடு இறுதியில் சென்று அடைகிற இடத்தை அதற்க்கான முழு திட்டமும் அவங்க கையில் இருக்கும், பாதையை விட்டு கொஞ்சம் விலகினாலும் பெரிய ஆபத்துனு எதோ உள்ளுணர்வாக இருக்குமோ என்னவோ ரொம்பவும் கவனமாக கடினமா தங்களோட வாழ்க்கையை அமைத்து நடப்பாங்க. படிச்சி டிகிரி வாங்கி வேலைக்கு போறது வேற விசயம் ஆனா காலேஜ் வாழ்க்கையை கடைசி வரை மறக்க முடியாமல் ஆக்குவது கண்டிப்பா அந்த டிகிரியா இருக்காது. நானெல்லாம் அந்த நாலு வருசத்த கடைசி வரைக்கும் மறக்கவே கூடாதுனே சில பல திரில்லரான வேலைகள் செய்திருக்கேன். ஆனாலும் எனக்கே பலதை தவற விட்டு விட்டோம் என்ற எணணம் இன்றுவரை உண்டு. அதற்கு காரணம் எனக்கும் எதிர்காலம் பற்றிய பயம் உண்டு,தெரிந்தோ தெரியாமலோ நானும் என் வாழ்க்கையின் சில கணங்களை கடினமாக்கிக் கொண்டேன் என்றுதான் தோன்றியது ராஜனை பார்க்கும்போது.

ராஜன் எங்கள் அலுவலகத்தில் எனக்கு பின்பு சேர்ந்தவர்தான்.தந்தை இறந்து அவருடைய வேலை இவருக்கு கிடைத்தது. திருமணம் ஆகி இரண்டு ஆண் குழந்தைகள். ஆனால் நான் அதுவரை பார்த்திராத குடும்பத் தலைவர் என்றுதான் சொல்லவேண்டும்.மனிதருக்கு இல்லாத  பழக்கமே கிடையாது, சிகிரெட்,தண்ணி,பொன்னுங்கனு ஒரு சுகபோகினு சொல்லலாம். லோக்கலில்  பல பெரிய ஆட்கள், அடிதடி ஆட்களின் சகவாசம் வேற உண்டு. நான் வேலை  செய்யும் அலுவலக்த்தில் அனைவருமே 'குடி'மக்கள்தான் என்றாலும் அவர்களுக்கு குடும்ப பொறுப்பு இருப்பதை சில சமயங்களில் பார்க்க முடியும். இவருக்கு மனைவியோ குழந்தைகளோ இருப்பது அவர் பேச்சில்கூட தெரிந்து கொள்ள முடியாது. சம்பள சிலிப்  மூன்று அல்லது இரண்டு இலக்கம் தான்.  போடாத லோன் இல்லை.பிடித்தம் போக வீட்டுக்கு என்ன  போகுமோ தெரியல.அவருடைய அம்மாவுக்கு பென்ஷன் வரும் அதில்தான் குடும்பம் ஓடும்போல.அவர் எங்கள் அலுவலகத்திற்க்கு வந்து சேர்ந்த்தே ஏற்கனவே வேலை செய்த இடத்தில் பணத்தை கையாடல் செய்து கிடைத்த தண்டனை யால்தான்.

சக ஊழியருக்கெல்லாம் ஒரு பயம் இங்க என்ன செய்ய போறானோன்னு. ஆனா வந்த கொஞ்ச நாள்லயே எல்லார்கிட்டேயும் சிரிச்சி பேசி ரொம்ப ஜாலியான பேர்வழினு பேர் வாங்கிட்டாரு.இங்க ஏறகனவே எல்லாரும் தண்ணி கேசு இவரும் வந்து சேர்ந்துட்டதனால கேட்கவா வேணும்.வேலை முடிஞ்சதும் குரூப்பாவே தண்ணி அடிக்கிறதுனு எல்லாரும் ரொம்ப நெருக்கமாகிட்டாங்க.ஆனா செலவு எப்பவுமே இவருதான். அவங்க பையிலிருந்து காசே வெளிய வராது.எனக்கும் அவரோட நல்ல சினேகம் இருந்தது.

வந்த கொஞ்ச நாள்லயே மேலதிகாரிக்கும் அவருக்கும் மோதல், வேலையும் சரியா செய்யறதில்லை,பேச்சு எப்பவுமே உயர் டெசி பெல்லதான் இருக்கும்.

"த்தா நீ யார்றா என்ன வேல செய்ய சொல்றது,ஒரு போன் போட்டனா வீடு போயி சேர மாட்ட"

"ஐ வில் டேக் சிவியர் ஆக்சன் ராஜன்"-அதிகாரி.

"போடா தெரியும்  எல்லாத்தையும் பாத்துட்டுதான் வந்திருக்கோம்"

"ஐ வில் இஷ்யு மெமொ"

"குடு குடு கிழிச்சி மூஞ்சில போடுறேன்"

இந்த மாதிரி எதிக்ஸ்லாம் இங்க வழக்கமானதுதான்.இது பரவால்ல  இதுக்கு  முன்னாடி மேலதிகாரிய ஊழியர் ஒருத்தர அறுவாளால வெட்ட வந்ததுலாம் வேற விசயம்.ராஜன் எளிதில் கோபம் அடையக்கூடியவர்தான்,ஆனாலும் வெளிப்படையாக பேசுபவர்,வெளியிலும் நண்பர்கள் வட்டம் கொஞ்சம் பெரிது.மாலை நான்கு மணி ஆனதுமே மொபைல் அலற ஆரம்பித்துவிடும், பார்ட்டி முடித்துவிட்டு வீடு போக பத்து ஆகும்போல.

வாழ்க்கையில் பெரிதாக தெரிகிற சில விசயங்கள் நாம் தேடிப்போனாலும் கிடைப்பதில்லை,ஒருவேலை அதை பெரிதாக நினைக்காவிட்டால் அது அன்றாட நிகழ்வாக நடந்துவிட்டுப்போகுமோ என்னவோ மூத்திரம் பெய்வதுபோல.ராஜனுக்கு எல்லா விசயமும் அதுபோலத்தான்.

எனக்கு அவரை பார்க்க சில சமயம் பொறாமையாகக் கூட இருக்கும்,எந்த கவலையுமே இல்லாம மனுசன் இருக்கமுடியுமா அதுக்கு ராஜன் மாதிரி இருந்தாதான் முடியுமானு?ராஜனை போன்றவர்களை நிகழ்காலத்தில் வசிப்பவர்கள் என்றுதான் சொல்வேன்.கடந்த கால ஏக்கமும் இல்லை எதிர்காலத்தை பற்றிய சிந்தனையும் இல்லை.எந்தவித சிந்தனைகளுமின்றி வாழ்க்கையை அனுபவிக்க தெரிவதும் ஒரு வரம்தான்.

என்ன மேட்டருன்னா எங்க அலுவலகத்துல ஒரு பொண்ணும் வேலை செய்யுது,சின்ன வயசிலே விதவை ஆனவங்க,அவங்க கணவரும் அங்கயே வேலை செயதவர்தான்.ஆனா தெரிந்த பெண்ன்றதனால மற்ற எல்லா  ஊழியர்களும்  அதுகிட்ட கண்ணியம்மா நடந்துப்பாங்க.அதுக்கும் ஆபிஸ் வந்துட்டு போறத தவற வேற வேலை எதுவும் செய்யத் தெரியாது. சொன்னாலும் திருதிருனு முழிக்கும்.இதுக்கிட்ட என்னத்த சொல்லினு இருக்கும்,பார்த்தாலும் பாவமா இருக்கும்.நமக்கு சில சமயம் வேலை கடுமையா இருக்கும்போது இது சும்மா தேமேனு உட்கார்ந்திருக்கும் அப்டியே  எரிஞ்சி வரும் ஆனாலும் சொல்லத் தோணாது.

 ராஜன் கிளார்க்காதான் வந்தாரு,இந்த பொன்னும் சும்மாதான் இருக்கேன்னு அவருக்கு துணையா எடுபுடி வேலை செய்யட்டுமேனு அதே ரூம்ல விட்டாச்சு. கொஞ்ச நாள் நல்லாத்தான் போயிட்டிருந்தது.நாளாக அந்த பொன்னு கிட்டேயும் சில மாற்றம் தெரிஞ்சது.மேக்கப் பொட்டுகிட்டு,கலர் கலரா புடவ கட்டிகிட்டுனு, அவருடைய ரூம்லயும் பேச்சு சத்தம் சிரிப்பு சத்தம்னு அதிகரிக்க ஆரம்பித்தது.ஜாலியா எதாவது பேசுவார்னு சும்மா இருந்துட்டோம்.

எங்ககிட்ட ஒருத்தர் இருக்கார் இந்த மாதிரி விசயங்கள ஆராய்ந்து மோப்பம் பிடிக்கறதுக்குனு,வேலை செய்வாரோ இல்லையோ போட்டு கொடுக்கிறது, பத்த வைக்கறதுதான் இவர் வேலை. ஆரம்பத்திலே  புலம்பல்,விசயம் வேற மாதிரி போயிடிச்சுனு.முதல்ல யாரும் நம்பல,அவரு சும்மா இருப்பாரா? யாரும் நம்பலைனு தெரிஞ்சதும் ஆதாரம் திரட்ட ஆரம்பிசிட்டாரு. ஒருநாள் அந்த பொன்னோட மொபைல் நம்பர கொடுத்து  அவுட்கோயிங்க் நம்பர் லிஸ்ட் கேட்டாரு நானும் ஒரு ஆர்வத்துல தட்டி பார்க்கும்போதுதான் தெரிஞ்சது. கடலை ஆபிஸ்ல முடிஞ்சி வீட்லையும் தொடர்ற விசயம்,ஆஹா மேட்டர் முத்திடிச்சு போல.தெரியாத்தனமா அந்த லிஸ்ட பிரின்ட் வேற போட்டு கொடுத்துட்டேன்.அவரு அதை கையில வச்ச்சிக்கிட்டு ஆபீஸ் பூரா ஆளுக் கொரு நகல் எடுத்து கொடுத்துட்டாரு. விசயம் அப்பத்தான் விவகாரம் ஆக ஆரம்ப்பிச்சுது.பொன்னு வேற தெரிஞ்ச பொன்னு, விடுவாங்களா?

 அடுத்த சில நாட்கள் அலுவலகமே அல்லோல கல்லோல பட்டது.விசயம் தெரிஞ்சு அந்த பொன்ன கூப்பிட்டு வச்சி கேட்டு அதுவும் இல்லைனு மறுத்து, நா  சும்மா  வேலை  சம்மந்தமா  சந்தேகம்  கேட்டேன்னு  அது சொல்ல, எல்லாருக்கும் தூக்கிவாரிப்  போட்டது.எனக்கு சிரிப்ப அடக்க முடியல.நேரடி ஆதாரம் இல்லாததால் கொஞ்ச நாள் அமுங்கிருந்தது விசயம்,என்னடா செய்யலாம்னு எல்லாரும் கையை பிசைந்து கொன்டிருக்கும்போது ஒரு நாள் ஆபிஸ் செக்யூரிட்டி அவங்க ரெண்டு பேரையும் ஏடாகூடமான நிலையில  அவங்க அறையில்  பார்க்க இப்ப ஆதாரத்தோட மாட்டிக்கிட்டாங்க.விசயம் மேலதிகாரி வரைக்கும் போனது. இதுக்கிடையில எங்க ஆபிஸ்ல இருந்த வங்க நடத்துன கூத்து இருக்கே,அவரோட குரூப்பா சேர்ந்து சரக்கடிச்ச வங்கெல்லாம் இப்போ எதிரியாகிட்டாங்க,

"அடிங்கொ தெரிஞ்ச பொன்னுனு கை வைக்காம இருந்தா இவன் வேலைய காட்டிடானா "

"ஆபிச பெனாயில் ஊத்தி கழுவங்கயா"னு அடிக்க போயிட்டார் ஒருத்தர்.

அதுவரைக்கும் வெறும் ஊழியராக இருந்தவங்கெல்லாம் கலாச்சார காவலராகி கையில கட்டைய எடுத்துட்டாங்க.ஒருவாரம் ஆபிசே குத்துவேன் கொல்லுவேன்னு ரணகள பூமியா இருந்தது.அவருக்கும் பின்புலம் கொஞ்சம் நிறைய இருக்கும் போல அந்த தைரியத்தில் 'பாத்துர்றேன், தூக்கிட்றேன்'னு எதிர்கூச்சல்.ஆனா அடிதடி நடந்த பாடில்ல.எல்லாருக்கும் வேலைய பற்றிய பயம் இருந்தது யாரு முதல்ல கைய வைக்கறதுனுதான் கொஞ்சம் தயக்கம்.ரத்தம் வராம சாட்சியில்லாம அடிச்சா கம்பெனி நடத்தை விதிகள் பாயாது.

ஒரு சமயத்தில் தொடர்பு  இருக்குனு ரெண்டு பேரும் ஒத்துக்கிட்டதுக்கு அப்புறமும் பிரச்சணை முடிஞ்சபாடில்லை.விசயம் அவங்க வீட்டுவரைக்கும் போக அந்த பொன்னோட  பெரிய பையனுக்கு பதிமூன்று வயது ,அவன் வீட்டு பக்கமே வர்றதில்லை, இவரோட  வீட்ல அவர் அம்மா மனைவி விசம் குடிச்சிடுவேன்னு மிரட்ட, இவரு அம்மாவையும்  மனைவியையும்  வீட்ட  விட்டு அடித்து துரத்த இவங்க காதல் இன்னும் முற்றியதே தவிர குறையல. எங்க ஆபிசுலயும் என்னென்னமோ செஞ்சி பார்த்தாங்க,ம்ம்ம் நடக்கல, அப்புறம் ஒரு நல்ல நாள்ல ஆள் செட் பண்ணி கை கால் முறிக்கற வரைக்கும் போன போது ரெண்டு பேரும் கோயிலில் கல்யாணம் செய்துகிட்டாங்க.

இப்போ ஊரறிய வைப்பாட்டி,  ஆபிஸ்லயும்  கொஞ்ச  நாள் மழை  விட்டும்  தூவானம் மாதிரி  அவ்வபோது  சில  வாய்ச்சண்டைகள், அவ்வளவு தான், பிசுபிசுத்தது. இப்போ கோபம் குறைந்து பொகைச்சல் ஆரம்பித்தது,

"மனுசன் வாழ்ந்தா இவன மாதிரி  வாழனும்டா,நாமளும்தான் வாழுறோம்"

"ஆமா தேவுடியா, புருசன் செத்து வயித்து பொழப்புக்கு வேல கொடுத்தா,ஒடம்பு பசிதான் முக்கியமா போயிட்டுது இவளுக்கு"

"இவதான் மயக்கிட்டா,நா கொஞ்ச நாள் சிரிச்சி பேசிருந்தா என்னையும் வளைச்சி போட்டிருப்பா "

ராஜனின் வீட்டில்அவர் மனைவியின் கூச்சல் மட்டும் அவ்வபோது எழுந்து அடங்கும்போல மற்றபடி பணத்திற்க்கு இப்போது பிரச்சணை இல்லையென்று கேள்வி, வீட்டில் பிரச்சணை வந்தாலாவது இதற்கு ஒரு முடிவு வரும் என்று எதிர்பார்த்தவர்கள் அப்படி ஆகாததால்,அவர் குடும்ப பிண்ணனியை சந்தியில் இழுத்தனர்.

"அவனோட அம்மாவே ஒரு தேவடியாங்க,அவ பொண்டாட்டி ஊர் மேயுறவ,மாமியாரும் தொழில் பண்றவ பின்ன தாயளிக்கு புத்தி எப்படி போவும்,அவன் குடும்பத்துக்கு இதுலாம் ஒரு விசயமே இல்ல"

இப்படி சிறிது நாள் பேச்சுகள் வந்து பின் அதுவும் ஓய்ந்து போனது.

இவ்விசயத்தில் பிரச்சணை எழுப்புவது ஊழியர்கள் மட்டும்தான் ஏற்கனவே பல ஆண்டு முன்விரோதம் மேலதிகாரிக்கும் அவர்களுக்கும் இருந்ததால் எதிர்பாராதவிதமாக மேலதிகாரி ராஜனுக்கு ஆதரவாக இருந்தார். ஊழியர்கள் கொடுத்த மனுவை அவர் பரிசீலக்கவே இல்லை

ஆரம்பத்திலிருந்தே இந்த விவகாரத்தில் நான் விலகியே இருந்தேன்,அவர் கூடவே சேர்ந்து சரக்கடிக்கவில்லையென்றாலும் அவரிடம் எனக்கு நல்ல பழக்கம் இருந்தது.விவகாரம் நடந்து கொண்டிருக்கும்போது ஒருமுறை அலுவலக ஊழியர்கள் அனைவரும் சேரந்து ராஜனை இடைநீக்கம் செய்ய மணு எழுதி அனைவரின் கையெழுத்தையும் வாங்கி என்னையும் கையெழுத்திட எவ்வளவு வற்புறுத்தியும் நான் முடியாதென்று மறுத்துவிட்டேன்.

ஒன்று அலுவலக நன்னடத்தை விதிகளின்படி இதுமாதிரி சம்பவங்கள் தண்டிக்கபட வேண்டியவைதான் ஆனால் பாதிக்கபட்டவர் முறையீடு செய்திருக்க வேண்டும்.அதற்க்கு இங்கு வழியில்லை. இல்லையென்றாலும் கூட அலுவலகத்தில் இருவரும் தகாத நடத்தையில் ஈடுபட்டதை ஒருவர் பார்த்திருக்கிறார்,இதை வைத்துக்கொண்டு அவரை நீக்கம் செய்யலாம். ஆனால் இங்கு இதெல்லாம் ஒரு விசயமே கிடையாது.எங்கள் கம்பெனி வரலாற்றை திரும்பி பார்த்தால் தெரியும். ஒரு கோடிவரை  ஊழல் செய்து  ஒரு இடையூறும் இல்லாமல் பணி ஓய்வு பெற்றவர்கள் உண்டு. இது ஒரு சார்பான காரணம் மட்டும்தான் நான் இந்த விசயத்தில் ஒன்றும் செய்வதற்கில்லை என்பதற்கு. உண்மை என்னவென்றால் என்னுடைய குழப்பமான மணநிலைதான்.ராஜன் ஏற்கனவே திருமணம் ஆனவர் அவர் செய்தது தவறுதான்,ஒரு பெண்ணுக்கு துரோகம் செய்துவிட்டார்.

உண்மையில் இருவரும் திருமணம் வரை செல்ல வாய்ப்பிருக்கவில்லை, ராஜன் அவ்வாறு மாட்டிக்கொள்பவரில்லை.எங்க ஊழியர் சொன்னதுபோல

"அந்த பொன்னுக்கு ஒடம்பு பசி,இவனுக்கு காசு வேணும் சரக்கடிக்க"

இந்த சம்பவத்தை அப்படியே விட்டிருந்தால் இருவரும் தானாகவே பிரிந்திருக்க வாய்ப்புண்டு,இருவருக்குமே வீட்டில் குழந்தைகள் உண்டு. உண்மையில் ஊழியர்கள்தான் இதை பெரிதாக்கி வெடிக்க வைத்துவிட்டார்கள்.

இப்போதெல்லாம் அலுவலகத்துக்கு ராஜனும் அந்த பெண்ணும்  ஜோடியாகத்தான் வருகை, சிரித்துப் பேசிக்கொண்டே,மற்றவர்கள் காதில் விழும்வரை. இவருக்கும் இப்போ இரண்டு சம்பளம், சரக்குக்கு குறைவில்லை. கை செலவில் பஜாஜ் டிஸ்கவர் ஒன்னு வாங்கியாகிவிட்டது,கலர் கலராக ட்ரெஸ், அவர் மனைவியும் வேற வழியில்லாமல் இவரிடம் வந்துவிட்டதாக தெரிந்தது. இப்போது இரண்டு குடும்பம்.மனுசன் ஒரு மாதத்தில் ஏக சதை போட்டு முகத்தில் பள பளப்பு கூடியிருந்தது. முன்னைவிட முகத்தில் எப்போதும் ஒரு எள்ளல் தொணி, சிரிப்பு.

"பார்த்தியா எப்டி வந்தோம்ல" என்று.

சரி முடிந்தது, இனிமேலாவது வாங்குற சம்பளத்திற்க்கு அலுவலகத்தில் வேலை நடக்குமென்று நினைக்கும்போது ஒரு நாளில் ராஜன் அவர் வீட்டு மின்விசிறியில் மனைவியின் புடவையால் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருந்தார்.   
              
சற்று வியப்பாகத்தான் இருந்தது.புற உலகத்திற்க்காகவே  தங்களுடைய  வாழ்க்கையை  கடினமாக்கி   கொள்பர்களின்  மத்தியில் ராஜன் சில நாட்களாவது தன்னுடைய விருப்பம்போல் வாழ்ந்திருக்கிறார் என்றுதான் நினைத்தேன்.ஆனால் அவர் கடுமையான மண உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்.

எந்த ஒரு மனிதனுக்கும் எவ்வளவு பெரிய பாவங்களிலிருந்தும் தன்னை விடிவித்துக் கொண்டு  ஒரு புதிய வாழ்க்கை வாழ உரிமையுண்டு.

ராஜன் தூக்கு மாட்டி தொங்கிய மறுகணமே குடும்பத்தினர் வந்து காப்பாற்றியுள்ளனர்.ஆனால் அவர் சில கணம் தாமதித்திருந்தால் நிலைமை விபரீதம்தான்.இப்போது முன்னைவிட தான் செய்வதில் நம்பிக்கையுடன் இருக்கிறார் .அந்த பெண்ணின் வீடு வரை சென்று குடும்பம் நடத்துகிறார். அந்தப் பெண்ணை வேறு ஊருக்கு பணி மாற்றம் மட்டுமே செய்ய முடிந்தது மற்றவர்களால்.