Wednesday 9 April 2014

பெருந்திணை: பிரிவு ஆற்றாமை


சித்திரை மாத இரவு. தலைக்கு மேல்  நட்சத்திரங்கள் செறிந்து தெளிவாக இருந்தது வானம்.குஞ்சு ரொம்பவே குழப்பமாகத்தான் இருந்தான், எந்த துக்கமோ சந்தோஷமோ அதை அனுபவிப்பதை விட அதை நோண்டி ஆராய்ந்து புதிர் அல்லாததை புதிராக நினைத்து பதில் தேடுகிறேன் என்று தன்னையே குழப்பிக்கறது ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டிருந்தது இது நாள்வரை.  செல்ஃபோனை நோண்டிக் கொண்டிருந்தான். சாதாரன நாட்களாக இருந்தால் வானில் அகன்ட வெளியை நோக்கி அவற்றின் புதிர்களுக்கு விடைக்காண முயற்சிக்கலாம். இது அதுவும்  இல்லை. ஆனால் என்னவோ மல்லாக்க படுக்கப் போட்டு பெரியதொரு பாறையை நெஞ்சின் மீது ஏற்றி வைத்தது போல பாரம் கனத்தது. விலக்கும் தோறும் கனக்கும் போல. பாறையாகவே ஆகிவிட்டாலன்றி வேறு மார்க்கம் இல்லை என்று தோன்றியது.

காரணம்  'தனு' தான்.  காதலிக்கத் தொடங்கி அது நிறைவு பெறுவதற்குள் அடுத்த காதல் ஆரம்பித்து விடுவதாலயே காதலால் ஏற்படுகிற காயம் அந்த நிலையெல்லாம் தான் எப்போதோ கடந்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்தாலும் இரண்டு நாட்களுக்கு முன் தனு அப்படி முடிவாக சொன்னதின் பொருளை அவள்தான் சொன்னாளென்று நம்பவே கொஞ்ச நேரம் பிடித்தது, "இது என்னடா மதுரைக்கு வந்த சோதனை, நிஜமாவே வலிக்குது" என்று நினைத்துக் கொண்டான்.

ஒரே நிமிடம்தான் அவள் பேசியது.

"வீட்டுக்கு தெரிஞ்சிப் போச்சி,அப்பா எங்கிட்ட பேசி ஒரு வாரம் ஆகுது, அம்மா அழறாங்க, இது இனிமே சரி வராது, வீட்ல ஒத்துக்க மாட்டாங்க, அவங்கள எதிர்த்துலாம் நம்ம கல்யாணம் நடக்க வாய்ப்பே இல்ல நானும் அத பண்ணமாட்டேன், இதுல யோசிக்கறதுக்கு ஒன்னுமே இல்ல எங்க வீட்ல பிடிக்கல அவ்ளோதான், இனிமே எனக்கு ஃபோன் பண்ணாத" பதிலுக்கு காத்திராதவளாக பேசி முடித்துவிட்டு தொடர்பை துண்டித்தாள்.

பெரிய கவித்துவமான வாக்கியம் மாதிரியோ,உள்ளார்ந்த அர்த்தம் பொதிந்து கிடப்பது போலவோ இல்லை, ரொம்ப நாள் யோசித்து சொன்னது மாதிரியும் தெரியல ஆனா இதை வேறு எப்படியும் சொல்ல அவசியம் இல்லைதான். அந்த மாதிரி சொல்லவும் சிரத்தை எடுத்துக்கொண்டதாகவும் கூட தெரியவில்லை, காயப்படுத்துற எண்ணம் கூட இருக்கறதா தெரியல. ஆனால் அப்படி எந்தவித  எண்ணமும் இல்லைன்னாலும் காயப்படவேதான் செய்தது.

பொதுவாக பெண்கள் இது போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் இவ்வாறு ஒரு முடிவெடுப்பது தெரிந்ததுதான் என்றாலும் காதல்னு வந்தபிறகு அதில் திளைத்து அதே சமயம் இந்த புற உலக பிரக்ஞையோடும் இருப்பது கடினம்தான், மாசத்துக்கு ஒரு தடவ நிதானமா லைட்டா சரக்கு அடிக்கறவன குடிகாரன்னு சொல்லமாட்டோம் இல்லையா அதே மாதிரிதான் பிரக்ஞை அற்றுப்போன மொடாக் குடிகாரனோட நிலைமையத்தான் காதல்னு சொல்லுறோம். அப்படித்தான் காதலித்திருந்தான் குஞ்சுவும். பிரக்ஞை அற்றுப்போய். தனு ஒரு வருடமாகத்தான் பழக்கம், செல்போனில் ஆரம்பித்து அப்படியே காதலாக வளர்ந்துவிட்டிருந்தது. இந்த ஒரு வருடத்தில் அவன் ஒவ்வொரு அசைவிலும் அவளின் தாக்கம் இருந்தது அல்லது அவனுடைய அசைவின் காரணமே அவளாக இருந்தான்னுதான் சொல்லனும் அவளுக்கும் அப்படித்தான்னும் அல்லது அப்படி இருக்குமா? என்ற சந்தேகமும் இல்லாமல் இல்லை.பின் அவ்வபோது நேரில் சந்தித்து காதல் கானம் பாடி ஓடி தழுவியும் நழுவியும், பிறந்த நாள் காதலர் தினங்களுக்கு அன்புப் பரிசு பறிமாறுதலுமாக ஓடிக்கொண்டிருந்தது. ஆனாலும் தனு ஆரம்பம் முதலே புலம்பல்தான்,

"அப்பாவுக்கு தெரிஞ்சுதுனா அவ்ளோதான், நா உங்கிட்ட பேசுற மாதிரி யாருகிட்டயும் பேசுனது கிடையாது, இதெல்லாம் கேட்டாங்கனா நானா இப்டினு நினைப்பாங்க நம்பவே மாட்டாங்க, என்ன நல்ல பொன்னா நினைச்சிட்டு இருக்காங்க, இனிமே அடிக்கடிலாம் பேசமாட்டேன், எப்பயாவது தான் "

"இது ஒன்னும் பெரிய தப்பில்லையே நீ வேணா பாரு இன்னும் பத்து வருஷத்துக்கு அப்றம் இந்த கல்யாணம்ன்ற நிகழ்வே அரிதாகிடும், நாம செய்யறது தப்பா சரியானு நமக்கு பிந்தி வர்றவங்கதான் சொல்லனும்"

"நா அம்பது வருஷமானாலும் சரி வீட்ல ஒத்துகிட்டாதான், அவங்க நம்பிக்கையலாம் என்னால கெடுக்க முடியாது, நூறு வருஷம் ஆனாலும் என்ன பொறுத்த வரைல அது வீட்டுக்கு செய்யுற துரோகம்தான்"

இப்படி நிச்சயமில்லாமல் பேச்சு இருந்தாலும் நாளைக்கு பத்து தடவ அழைப்பு, அதற்கு இடையில் குறுஞ்செய்திகளும் வருவது தவறாது.

"நம்ம கல்யாணம் நடக்குமானுலாம் தெரியாது, என்னால ஓடிலாம் வர முடியாது, அப்டி ஏதும் நினைப்புலாம் வச்சிக்காத, வேற பொன்ன கல்யாணம் பண்ணிக்கோ"

ஆனாலும் மொபைல் எடுக்கலனா செமயா கோபம் வரும், "என்ன கழட்டி விட பாக்குறியா, கொண்ணுடுவேன், சரி இதுக்கு பதில் சொல்லு, என்ன புடிச்சிதான் லவ் பண்றியா" இந்த மாதிரி டார்ச்சர்லாம் ஒரு ஆம்பளை தன் வாழ்நாள்ல அனுபவிக்கலனா ஒன்னும் சொல்லுறதுக்கு இல்ல. அவளின் இந்த புலம்பல்கள் காதலில் இருந்த அந்த ஒரு வருட காலமும் நீடித்து இருந்தது என்பது ஆச்சர்யபடும் விஷயமில்லைதான்.

எப்படியோ ஒரு நாள் மொட்டை மாடியில் செல்ஃபோனில் காதல் ரசம் சமைக்கும்போது ஒரு துளி அவங்க வீட்டுக்குள் தெறித்து பற்றி எரிய ஆரம்பித்துவிட்டது. வீட்ல மாட்டிக்கிட்டா, குட்டு வெளிப்பட்ட அடுத்த இரண்டு நாட்கள் அவளிடமிருந்து எந்த அரவமும் இல்லை, எத்தனையோ தவிர்க்கப்பட்ட அழைப்புகளும் குறுஞ்செய்திகளுக்கும் பின்னுமாக ஒரே ஒரு பதில் வந்தது, இப்படியாக பிரிந்துவிடலாம் என்று. எதிர்பார்த்துதான். ஆனால் தன்னை சமாதானப் படுத்தும் எண்ணம் துளிக் கூட இல்லாமல் அவள் பேசியதுதான் நிறையவே காயப்படுத்தியது குஞ்சுவுக்கு.

"இதை எப்டி சொன்னா சமாதானம் அடைவேன்னு கொஞ்சமாவது நினைத்து பார்த்திருக்கனும், ஆனா அது மாதிரிலாம் ஒன்னும் தெரியல, சுத்த சுயநலம், எங்கிட்ட எடுத்து சொல்லிருந்தா நானே விலகிப் போயிருப்பேன், அப்போ என்னோட நிலைமை ஒரு பொருட்டே இல்ல அவளுக்கு, ஒரே ஒரு மெசேஜ் மட்டும் போதுமா இருந்திருக்கு, எல்லாத்தையும் மறந்துடுனு எவ்ளோ சுலபமா சொல்லிட்டா அதுவும் ஒரு மெசேஜ்ல, ஃபோன் பண்ணி சொல்லக்கூட பிடிக்கலயோ, அவ சொன்னதை பார்த்தா ஒரு முடிவோடதான் இருக்குற மாதிரி தெரியுது" உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருந்தான். ஆத்திரம் பொங்க சுவற்றில் ஓங்கி அறைந்தான், 'விண்'னென்று தெறித்தது வலி. பொறுக்கமுடியாமல் கெட்டவார்தையில் கத்தினான், "த்தா..நாரக்**..தே***..பு***"

அந்த நேரம் பின் வீட்டு மாடியில் ஏதோ அரவம் தெரியவே அமைதியானான். அந்தப் பெண்தான், இது வேற கதை. ஒரு வருடத்திற்கு முன் கண்களால் பேசி அந்த நிலையிலேயே கைவிட்டாயிற்று. இப்போது இந்த நிலைமையில், கொஞ்ச நேரம் சைட் அடித்து சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டான். இறுக்கமாக இருந்த சூழ்நிலை கொஞ்சம் மாறியது. தென்னைக் கீற்றுகள் சற்று அசையத்தொடங்கியது, வியர்த்திருந்த உடலில்  லேசான குளிர்ந்த காற்று தழுவிச் சென்றது.இதமாகத்தான் இருந்தது, அமைதியானான். அந்தப் பெண் சென்றதுமே மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தான்.

அவ்வளவு எளிதில்  இந்த முடிவை அவளால் எடுக்க முடிகிறதென்றால் அதற்கான சமாதானங்களை அவள் நிச்சயமாக அந்நேரம் உருவாக்கி கொண்டிருக்க வேண்டும். என்னவாக இருக்கும் என்ற புதிரை அவிழ்க்க தொடங்கினான். தனுவுக்கு அவங்க அப்பாவை ரொம்ப பிடிக்கும் என்னையும் பிடிக்கும்தான் ஆனால் இருவரில் யாரென்று வந்தால் சந்தேகமே வேணாம், அந்த நிலைமை இப்போ அவளுக்கு வந்திருக்கலாம், காதலித்த சமயத்தில் இருவரும் பரிமாறிக்கொண்ட அந்த இனிமையான உரையாடல்கள் அந்த நினைவுகள் கொஞ்சமும் அசைக்கலயா அவளை, அசைத்திருக்கும், அவளின் குடும்பத்தில் இந்த புதிதான பிரச்சணை அவளிடம் ஏற்படுத்திய மாற்றத்தை  அதை தடுக்கும் அளவுக்கு அந்த காதல் நினைவுகள் இல்லை என்பதுதான் உண்மை, காதலிக்கும்போது  பேசினது எல்லாமே உண்மையாக இதயத்திலிருந்துதான் வந்திருக்கனும் என்பதில் சந்தேகமில்லைதான் அதே சமயம் கண்ணு முன்னு தெரியாம காதலிக்கற அளவுக்கு அவள் பேதையும் இல்லை.

மேலும் அவள் வளர்ந்த சூழ்நில வேறு, கட்டுப்பாடான ஒன்று, கலாச்சார விதிமுறைகளை அடிப்படை அறமாக நினைத்து போதிதுக் கொண்டிருக்கும் பெரும்பாலான குடும்பம் போல்தான், அதன் காரணமாக அவளிடமிருந்து அவ்வபோது எழுந்த பயம் கலந்த புலம்பல்களை  நம்பிக்கையான வார்த்தைகளை கூறி சமாதானப் படுத்த முனைந்ததில்லை அது ஒரு காரணமாகக் கூட இருக்கலாம். சொக்க வைத்து மயக்கி இருக்க வேண்டுமோ? அப்படியே இருந்தாலும் அந்த பேச்சுக்கெல்லாம் மசிபவளும் இல்லை.

"உன்ன பார்க்காம இருக்கவே முடியல, இன்னிக்கு பூரா உன்னதான் நினைச்சிட்டு இருந்தேன், உனக்காக உயிரையே கொடுப்பேன்" இந்தமாதிரி சினிமா வசனங்களுக்கெல்லாம்  "சரி சரி அளக்காத" என்று எரிச்சலான ஒரு பதில் வரும். அப்படிசொன்னது நிஜமாகவே பொய்தான் என்பது வேறு என்றாலும் அவ்வாறு மயக்கும் வார்த்தைகளை எப்படி கூறுவது என்பது கூட தெரியாத அசடனாக குஞ்சு இருந்தான் என்பதையும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.இந்த தியாகத்தின் மூலம் வீட்டில் அவளுடைய பிரச்சணைகள் திர்ந்துவிடும் மாறாக யோசித்து இருந்தால்  பிரச்சணையை எதிர்நோக்கியபடியே வாழ்க்கையை கடக்க வேண்டிவரும்  என்ற எண்ணமே போதுமானது நிராகரிப்பதற்கு, இனி தனுவிடம்  பேசி ஒன்றும் ஆவதிற்க்கில்லை. இதிலிருந்து எந்த பலத்த காயமுமின்றி தப்பிக்க வழி தேடியாக வேண்டும். இவ்வாறு ஒரு நிலைக்கு வந்துவிட்டபோதே அந்த வழியையும் கூடவே கண்டடைந்திருந்தான். காதலில் காயம் ஏற்படாதவாறு விலகுவது என்பது சாத்தியமில்லாத ஒன்று என்பதை அறிந்திருந்தாலும் வேறு சில வழிகள் இருக்கத்தான் செய்கிறது.

குஞ்சு மீதான அவளின் காதலை சந்தேகப்படக்கூடிய அளவுக்கு எதுவும் இந்த ஓராண்டு நடந்தும் விடவில்லை அதனால் அதை நினைத்து சமாதானம் அடையவும் வாய்ப்பில்லை. பழிக்கு பழி வேண்டுமானால் உதவலாம். அதற்கு வன்மத்தை வளர்த்தாக வேண்டும், நயவஞ்சகமாக பழகி, பேசி துரோகம் இழைத்துவிட்டதாகவும் அல்லது தன்னைப்போலவே பல ஆண்களை அவள் ஏமாற்றியிருக்கக்கூடுமென்றும், இது அவளுக்கு ஒரு பொழுதுபோக்காகவே கூட இருக்கலாம் என்றும் எதாவது கற்பனை செய்து பார்க்கலாம் ஆனால் தனுவை அப்படி நினைக்கக் கூட மனம் துணியவில்லை. அப்படி நினைக்க முடியாவிட்டாலும் பழி வாங்குவது கொஞ்சம் ஆறுதலாக அமையலாம்.

எப்படி பழிவாங்குவதென்பது இங்கு பெரிய கேள்விதான்.

இந்த இழப்பு அவளுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்ற முடிவுக்கு அவள் வந்திருந்ததனால், கொஞ்ச நாளில் எல்லாம் மறந்துவிடும் என்று அவள் சமாதானமாகி இருக்கலாம். மாறாக வாழ்நாள் முழுவதும் தன்னை இழந்ததை பெரிய இழப்பாக நினைத்து வருந்தினாள் என்றால் அதுவே பழிதீர்த்த மாதிரிதான். அப்படி அவளும் நினைக்க வேண்டுமே அவ பேசினத பார்த்தா ஃபீல் பண்ற மாதிரியே தெரியல, இரண்டு நாட்களுக்கு முன் இதே நேரம் எப்படிலாம் பேசிட்டு இருந்தோம்,  இந்நேரம் நினைக்காம இருக்கவே முடியாது, அப்டி எந்த சலனமும் இல்லாமல் இருந்தாளென்றால் அவகிட்ட பார்த்தது எல்லாமே பொய்யாக இருந்திருக்கனும், நிச்சயமா சொல்லலாம், அவளுடைய குணாதிசயங்களுக்கு அவ்வாறு அது இல்லையென்றால் அதிசயம்தான். அவளுக்கு வேற ஒருவனுடன் திருமணமும் நடக்கும், அதற்கு அவள் சம்மதித்தே ஆவாள். நினைக்கவே பயமாகத்தான் இருந்தது, இல்லற வாழக்கையில் விரக்தி ஏமாற்றம் எப்போதாவது எல்லோருக்குமே வரக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கும். அந்த தருணங்களில் இழந்ததை நினைத்து வருத்தப்பட்டால் அதுதான் அவளுக்கு தண்டனையாக இருக்கக்கூடும். ஆம் அதுதான் தனக்கும் ஆறுதலாக அமையும் என்று நினைத்தான் குஞ்சு."அவசரப்பட்டு அவள திட்டி விட்டுட்டாளோ இல்ல டார்ச்சர் பண்ணாளோ அதுவே  விலக்குறதுக்கு ஒரு வலுவான காரணத்தை உண்டு பண்ணிடும், அதுக்கு வாய்ப்பளிக்க கூடாது இந்த இரண்டு நாளைக்கு முன்னாடி எப்டி காதலித்தாலோ அப்படியே பிரியனும், அதுதான் சரியாக இருக்கும்" மார்கத்தை கண்டடைந்தவனாக திருப்தியுற்றான்.

இது பெண்களுக்கு பொதுவாக உள்ள மனநிலை என்றுதான் நினைக்கிறேன் தான் காதலித்து கைவிட்ட ஆண்களும் மறக்காமல் தாடி வளர்த்து திரிய வேண்டும் என்ற ஆசை,உண்மையாகவே உள்ளம் உருகி காதலித்து இருந்தாலும்கூட. அவ்வாறு இல்லாமல் மறுநாளே சகஜ நிலைக்கு திரும்பும் ஆண்கள் பெண்கள் மனதில் நிலைக்காமல் போகிறார்கள். ஏமாத்துறவன்னு கூட நினைக்க வாய்ப்பிருக்கு.ஆனால் தனு அப்படியில்லை, தாடியுடன் அவளை நினைத்து மருகினானென்றால் "இந்த முட்டாளையா லவ் பண்ணோம்" என்று நினைத்து உதறித் தள்ளிவிடுவாள். மிகுதியாக உணர்ச்சிவசப்படவும் கூடாது, அதை சுத்தமாக வெளிப்படுத்தாமலும் இருக்கக்கூடாது. அதே சமயம் காதல் கைகூடாததற்க்கு முழு பொறுப்பை அவள் மீது ஏற்றிவைத்தாகிவிட்டால் பின்னாளில் அவள் நினைத்து வருந்த  ஏதுவாக இருக்கலாம்.

தனு இப்போ எந்த மனநிலையில் இருப்பாள் என்பதை உறுதிப்படுத்தியாக வேண்டும். இத்தனை நேரம் அவளிடம் பேசலாமா வேண்டாமா என்று குழப்பதுடனேயே மாடிக்கு வந்தவன் சற்றும் யோசிக்காமல் மொபைலை எடுத்து நம்பரை அழுத்தினான். மறுபக்கம் அழைப்பு ஒலி அடித்துக்கொண்டிருந்தது, கொஞ்சம் படபடப்பாகத்தான் இருந்தான்,அவளிடம் முதன்முதலில் பேசியபோதும் இப்படித்தான் இருந்தது,

"ஹலோ" மறுமுனையில் தனு.

".............."

பதட்டமாகத்தான் இருந்தான். என்ன பேசுவது என்று தெரியாமல் ஹலோ சொல்லக் கூட தடுமாறினான். பதற்றத்தில் சற்று முன் சிந்தித்த யாவும் மறந்தே போனது. இப்பவுமே கூட பிரக்ஞை இழந்துதான் போனான், இந்த இரண்டு நாட்கள் வேதனையை அனுபவித்திருந்தாலும் தன்னை இப்படி அலட்சியப்படுத்திப் பேசியதால் இனி அவளிடம் பேசவே போவதில்லை என்று கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தான். ஆனாலும் இப்போது தனுவின் குரலை கேட்டப்பிறகு எதுவுமே எடுபடாமல்தான் போனது, நடக்கப் பழகி தடுக்கி விழுந்த குழந்தை வலி பொறுக்க முடியாமல் தன் அம்மாவிடம் முறையிடுவது போலவே அவனும்,

"என்னால முடியல,மண்டையே வெடிச்சிடும் போல இருக்கு,என்னென்னமோ யோசிக்க தோனுது"

"ப்ளீஸ் புரிஞ்சிக்கோ"

"இல்ல என்னால மறக்க முடியும்னு தோணல"

"செல்லக்குட்டி... ப்ளீஸ் புரிஞ்சிக்கோ, வீடே அமைதியா இருக்கு இங்க யாரும் என் கூட பேச மாட்றாங்க,பழைய மாதிரி அவங்க என் கூட பேசனும் சகஜமாகனும் நீ சரியானாத்தான் நடக்கும் இதெல்லாம்,என்ன மன்னிச்சிடு ப்ளீஸ்"

"என்ன ஏமாத்திட்டல்ல, ஃபோன வையி பேசாத"

"சரி என்ன வேணா சாபம் விட்டுக்கோ,விட்ல நா எப்டிலாம் சண்டை போட்டேன் தெரியுமா,இதுவரை எங்க அப்பாகிட்ட சண்டை போட்டதே இல்ல,ஆனாலும் அவங்க கொஞ்ச கூட அசையல"

"அப்டிலாம் ஒன்னும் சாபம் விடமாட்டேன்"

"சரி எல்லாம் சரியாகிடும்,எனக்கு கொடுத்து வைக்கல அவ்வளவுதான்,இனிமே எனக்கு ஃபோன் பண்ணாத ப்ளீஸ் என்ன மன்னிச்சிடு"

"சரி வச்சிடு"

இதுதான் அவளிடம் பேசிய கடைசி வார்த்தை என்பதை நினைக்கவே வேதனையாகத்தான் இருந்தது. தன் பழிக்கு பழி வாங்கும் நினைப்பு இப்போது தகர்ந்தே போனது.நினைத்து வெட்கப்பட வேண்டிய ஒன்றாக இப்போது தோன்றியது. "எப்படிலாம் உருகி காதலித்தோம்,எப்படி என்னால் அவளை அப்படி நினைக்க முடிஞ்சது,ச்சே எவ்வளவு கொடூரமா யோசிச்சிருக்கேன்".

இருந்தாலுமே இது முடிந்துபோனதுதான் ஒருபோதும் அவள் திரும்பி வரப்போவதில்லை அதிசயமாக ஏதும் நிகழ்ந்தாலன்றி. மறக்க கற்றுக்கொண்டாக வேண்டும், முழுவதுமாக. கடினமான காரியம்தான். எதையாவது நினைத்து தேற்றிக்கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை. யோசித்துப் பார்த்தால் அப்படி ஒன்றும்கூட  இருக்கத்தான் செய்தது குஞ்சுவுக்கு.

உண்மைதான் தனு இப்படி போனது எங்கோ ஒரு மூலையில் விடுதலை உணர்வை ஏற்படுத்தியிருந்தது என்றால் நம்ப முடியாதுதான். திகைப்பாக இருக்கலாம் ஆனால் அது அப்படித்தான். பொதுவில், ஏமாற்றப் பட்டுவிட்டதாக தெரிந்தாலும் அதை அவ்வாறு எடுத்துக்கொள்ளாமல் வேறுவிதமாக அதாவது தனிமைப் படுத்தப்பட்டதாகவோ நிராகரிக்கப் படுவதாகவோ இல்லை கைவிடப்படுவதாகவோ எழும் எண்ணம் நம்மை முன்னெப்போதும் இல்லாத அளவு சுதந்திரமாக உணரச்செய்கிறது, புத்துணர்ச்சியாகவும்தான்.  அப்படி அதுவரை ஏற்கனவே பழகியும் விட்டிருந்தான்.அப்படியான சமயத்தில் தான் விரும்பியதை செய்ய எது தடையாக இருந்ததோ அந்த கட்டு  உடைந்திருக்கும். இது ஆபத்தான நிலைதான்.அதுநாள் வரை கட்டுப்பாடற்ற சிந்தனையோட்டத்தால் உருவாகியிருந்த தன்னுடைய அகம் பாதிக்கப்படும் என்ற தவறான புரிதலாலேயே இந்த மாதிரியான உறவுகளை தவிர்த்தும் வந்திருந்தான் குஞ்சு. அப்படியொரு நிலையில் இருந்த போதுதான் தனுவுடன் பழக்கம் ஏற்பட்டது. ஆனாலும் மாற்றிக் கொள்ளவுமே தயாரகத்தான் இருந்தான்.  நிலைமை  அப்படி இருக்கையில் யாருக்காக இத்தனை நாள்  தன்னையே நகலெடுத்துக் காட்டிக் கொண்டிருந்தோமோ அவளால் நிராகரிக்கப் படும்போது இந்த விடுதலையுணர்வு எழாமல் இருந்தால்தான் ஆச்சர்யம்.

ஆனாலும் தனிமையை விரும்பும் ஒருவன் இருக்கமுடியுமா என்ன.சில சமயங்களில் அதை விரும்பலாம்.முழுவதுமாகவே ஒருவன் தன்னை தனிமையில் தள்ளிக்கொள்ள விரும்பமாட்டான் என்றுதான் தோன்றுகிறது.ஆனால் அதற்கு பழகியவன் தான் குஞ்சு.குடிகாரனுக்கு சரக்கு அடிச்சதுக்கு பின்னாடி வரும் புது உற்சாகம் மாதிரி. குடி பழகிவிட்டதாலேயே பழகிப்போன உடல் ஒரு கட்டிங் உள்ளே சென்றால்தான் சகஜ நிலைக்கு திரும்பும். சாதாரணமாகவே தனிமை பழகிவிட்டவனுக்கு அனுதினம் அவ்வாறு அதை திரும்பத் திரும்ப உணர்த்தக்கூடிய மெய்ப்பிக்கக்கூடிய சம்பவங்கள் அவனை உற்சாகமூட்டத்தான் செய்கிறது. நிச்சயமாக இது  ஒரு அபாண்டமான பொய்  போலத்தான் தெரிகிறது, இதை  நமக்கு நாமே திருப்தியடைவதற்காக வேண்டுமானால்  சொல்லிக் கொள்ளலாம் . ஆனால் அப்படித்தான் சமாதானமடைந்தான் குஞ்சு.

இப்போது மீண்டும் பின்வீட்டு மாடியில் ஏதோ அரவம் கேட்டது. மறுபடியும் அவளேதான். ஏனோ இப்போது திடீர் கிளர்ச்ச்சி அடைந்தவனாக காணபட்டான். உண்மையில் இத்தனை நாள் இதை கட்டுப்படுத்திதான் இருந்தான் தனுவுக்காக.அந்தக் கட்டுப்பாடு இப்போது இல்லையென்பதால் அந்த கிளர்ச்சி ஏற்பட்டிருக்கலாம், ஆக முடிவில் உண்மை இப்படித்தான் இருக்கிறது, அதாவது,

கொளுத்துகிற வெயில்லயும்  ஜீன்ஸ் பேன்டை அணிந்துகொண்டு தொடை இடுக்கில் ஏற்படுகிற அரிப்பையும் பொருட்படுத்தாமல் வெளியுலக மனிதர்களிடையே சிரித்துப் பேசி வீட்டுற்க்கு வந்ததும் பேன்டை கழட்டி காலை நீட்டி விரிச்சி போட்டு விட்டத்தை பார்த்து காத்து வாங்குகிற சுதந்திரத்தைதான் இப்போது தனு தன்னை கழட்டிவிட்டதன் மூலம் அடைந்திருந்தான் என்பது ஆச்சர்யமாகவும் ஏற்றுக்கொள்ள முடியாமலும் தான் இருக்கிறது.