Thursday, 29 March 2012

சொல்ல மறந்தவை


 பிஸ்கட் பாக்கெட் மற்றும் வாட்டர் பாக்கெட் இரண்டு வாங்கி பையில் போட்டுக்கொண்டு திண்டிவனம் வழியாக சென்னை செல்லும் பேருந்தில் ஏறி சன்னலோர இருக்கைக்காக தேடிப்பிடித்து ஒன்றில் அமர்ந்தான் சண்முகம். அருகில் வயதான பெரியவர்,வாயில் வெத்தலையை குதப்பிக்கொண்டே,

"தம்பீ கொஞ்சம் இந்தபக்கம் வந்து உக்கருப்ப்பா, வெத்தல போடனும் " என்றார்
வாயாலே ஸ்ப்ரே அடித்துக்கொண்டு,

எரிச்சலடைந்தவனாக சண்முகம்,

"பேசாம ஒக்காருய்யா, கடுப்பேத்திக்கிட்டு"என்று முறைத்துவிட்டு முகத்தை துடைத்துக்கொண்டே சன்னல் பக்கம் திரும்பிக்கொண்டான்.

முனுமுனுத்துகொண்டே அமர்ந்தார் பெரியவர்.

முன் இருக்கையில் ஒரு கல்லூரி ஜோடி பேருந்தில் ஏறி உட்க்கார்ந்ததிலிருந்து கையில் மொபைலை வைத்துக்கொண்டு 'கெக்கபிக்க'னு சிரிப்பதும் மாறி மாறி காதில் குசுகுசுப்பதும், தொடையை கிள்ளுவதுமாக இருந்தது  ஒரு வேளை பிற்பாடு நிகழப்போகும் கூடலுக்கு முந்தைய ஊடலாக இருக்குமோ என்னவோ."இன்னக்கி தூங்குன மாதிரிதான்"

வலதுபக்கத்தில் கல்லூரி இளைஞர்கள் சிலர் நேற்றைய ஐபிஎல் போட்டியை பற்றி காரசாரமாக விவாதம் செய்து கொண்டிருந்தனர்.

"இந்த தடவ கண்டிப்பா சென்னை கப்ப கெளப்புதுடா"என்று ஒருவன்

"சான்சே இல்ல ,மும்பைதான்"என்று இன்னொருவன்.

"ரொம்ப முக்கியம்"

கிரிகெட் அதைவிட்டால் சினிமா வேறு பேசுபொருளே கிடையாது இந்தியாவில் இளைஞர்களுக்கு, நாம் மட்டும் என்ன நேற்றைய போட்டியை பார்க்கத்தான் செய்தோம்,பன்றியும் மலமும் போல இவை நம் வாழ்வொடு பிரிக்கமுடியாமல் தொடர்ந்தே வந்து கொண்டிருக்கிறது.

     மணி பதினொன்று,பேருந்து புறப்பட இன்னும் நேரம் இருந்தது.பேருந்து நிலையத்திலேயே சற்று உலாத்திவிட்டு வரலாம்,சனிக்கிழமை ஆதலால் நெரிசல் அவ்வளவாக இல்லை, அங்கொன்று இங்கொன்றுமாக சிலபேர் மட்டும்.பேருந்து நிலைய கழிவறை ஒன்றில் ஒரு ரூபாய் கொடுத்து, உள்ளே நுழையும்முன் மூச்சை தம்கட்டிகொண்டு சென்றான், பக்கத்தில் ஒருவன் தன்னையே குறு குறு வென பார்ப்பதை அறிந்து அவசர அவசரமாய் பேன்ட் ஜிப்பை மூடி கழிவறையிலிருந்து வெளியே வந்து வெகு நேரம் தம்கட்டிய  மூச்சை சற்று நிம்மதியாய் இழுத்து விட்டான்.

               கடையொன்றில் விகடன் இதழ் நடிகை படம் போட்டு தொங்கியது வாங்கலாம்,போகும்போது அலுப்பு தெரியாது ,வரும்போது தேவைப்படும்,முதன்முதலில் விகடன் வாங்கியது இந்த கடையில்தான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது நண்பர்கள் பேசுவதை கேட்டு பலான புத்தகம் வாங்குவதற்க்காக வந்து, கடைக்காரரிடம் கேட்க்க கூச்சப்பட்டு பயந்துபோய் விகடன் வாங்கி சென்று,பின்பு  நாலைந்து விகடன் வாங்கியபிறகு கடைக்காரர் பழகிப்போக ஒரு தீபாவளி நாளில் ஆசை நிறைவேறியது.கடைக்காரரை பார்த்து சிரிப்பதா வேண்டாமா என்ற சந்தேகத்துடனே ஒரு முடியாத சிரிப்பை உதிர்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

           மனம் அலைபாய்ந்தது,காலை சென்னை மீனம்பாகத்தில் கவர்மென்ட் தேர்வு,பொதுத்துறை கம்பெனி ஒன்றுக்காக விண்ணப்பித்தது.தமிழ்நாட்டில் மட்டும் இரண்டு லட்சம்பேர் விண்ணப்பித்ததாக செய்தி.வழக்கமாக இதுபோன்ற சமயங்களில் சென்னை  செல்வதாக இருந்தால்  கடலூர் சென்று அங்கிருந்து பாண்டி,பாண்டியிலிருந்து தாம்பரம்  அதற்குள் விடிந்துவிடும் இறங்கி ரயில்நிலையத்திலேயே முகம் கழிவிவிட்டு டீயோ,வடையோ உள்ளே தள்ளிவிட்டு ரயில் பிடித்து இறங்கி நடந்தால் தேர்வு மையத்தை அடைவதற்கு நேரம் சரியாக இருக்கும்.இந்த முறை வீட்டிலிருந்து தாமதாகவே கிளம்பியதால் நேரடியாகவே தாம்பரம் சென்று அங்கிருந்து ரயில் பிடித்து தேர்வு மையத்தை அடையலாம்.

                சென்னைக்கு செல்வது இது ஒன்றும் புதிதல்ல ,கல்லூரி முடித்து ஆயிற்று ஒன்னரை ஆண்டு.முதன்முறை சென்னைக்கு நேர்காணல் ஒன்றுக்கு செல்லும்போது வீட்டில் பயங்கர எதிர்பார்ப்பு,பீரங்கி முழக்கத்துடன் வழியனுப்பி வைக்காத குறைதான்,இதோடு இருபது இருபத்தைந்து இருக்கும் சிதம்பரத்திற்க்கும் சென்னைக்குமாக நேர்க்காணல் என்றும் கவர்மென்ட் தேர்வு என்றும்,வாரங்கள் மாதங்களாக மாதங்கள் வருடங்களாக இன்று மீண்டும் பேருந்து நிலையத்தில்.

            மெதுவாக நடந்து வரிசை நாற்க்காலியில்  உட்க்கார்ந்து சிந்தனையில் ஆழ்ந்தான்.அருகில் கையில் புத்தக்க்கட்டை வைத்துக்கொண்டு ஒருவன் நின்று பெராக்கு பார்த்துக்கொண்டிருந்தான்,புத்தகம் விற்பவன் போல தெரிந்தது,இதே இடத்தில் இவனை அடிக்கடி பார்த்த நினைவு.

திடீரென்று அருகில வந்து, 

"சார் தமிழ்நாடு மேப் வாங்குறிங்களா சார்"

முகத்தை பார்த்ததும் முடிவு செய்திருப்பான் போல "சரியான கிராக்கி" என்று

"இல்லப்பா போப்பா"

"வாங்குங்க சார்,உபயோகமா இருக்கும் சார்"

"வேணாம்பா"

"சார் கொஞ்சம் உள்ள பாருங்க சார்"உள்ளே திறந்து காட்டினான்,காலை அகற்றியவாறு குந்திக்கொண்டு வெள்ளைக்காரியின் படம் போட்ட சிடி.

திடுக்கிட்டவனாக "யோவ் என்னய்யா இது,இதெல்லாம் எப்பவோ பாத்தாச்சி போய்யா" என்றான் எரிச்சலோடு.

விடவில்லை அவன்,

"இது நல்லாருக்கும் சார் பாருங்க"

"போய்யா வேலய பாத்துக்கிட்டு"

"அப்ப வேற அயிட்டம் ஒன்னு இருக்கு சார்,பாருங்க"  புகைப்படம் ஒன்றை காட்டினான்.

"ஹோட்டல்ல வெயிட்ட்ங்க் ஒரு நைட் 500 ரூபா என்னா சொல்றீங்க?" என்றான் வேறு தொணியில்.

ஆஹா இது ஏதுடா வம்பா போச்சி,பேசாமல் போயிருந்திருக்கலாம் என்று தோன்றியது.

"யோவ் நா அந்த மாதிரி ஆள் இல்லய்யா,வேற ஆள பாரு"

"ரூம் ரெடியா இருக்கு,பாத்துக்கலாம் சார்,ஒன்னும் பிரச்சனை வராது.

"விடுய்யா போகனும்"

" வேணும்னா வேற ஒன்னு இருக்கு சார்,காலேஜ் படிக்குது,ஃபேமிலி பொன்னு"

திடுக்கிட்டு நின்றான்,பிறகு ஏதோ யோசித்தவனாக,

"வேணாம்யா விடுய்யா" என்று வேகமாக நகர்ந்து பேருந்துக்கு சென்று ஏறினான்.

              பேருந்தில் உட்க்கார்ந்துக்கொண்டான். ட்ரைவர் பேருந்தில் ஏறியாகிவிட்டது , வண்டி மெல்ல நகர்ந்தது. சிந்தனை அந்த தரகன் மேலெயே ஒடியது,

               வியாபாரம் படியவில்லை என்றதும் கடைசியாக சொன்னானே,அதென்ன காலெஜ் பொன்னு, ஃபேமிலி பொன்னு. கனிமொழி,தேன்மொழி என்றால் அடக்க ஒடுக்கமாக இருக்கும் பெண் என்றும் ,அலுவலகத்திலும் அவ்வபோது வாய்ப்பு கிடைத்தால் சோரம் போகும் பெண்களுக்கு ஸ்டெல்லா,ஜான்சி என்றும் பேருந்து நிறுத்ததிலும் ரயில்நிலைத்திலும் மலிவு விலையில் கிடைக்கும் பெண்களுக்கு அஞ்சல,முனியம்மா என்றும் தமிழ்திரைப்படங்கள் மூலம் நம்மிடையே பதிந்துபோன பெயர்மரபு போன்று இதென்ன அபத்தம்.காலேஜ் பொன்னு என்றதும் யோசித்தோமே,

ஒருவேளை இதுவும் ஒரு வியாபார தந்திரமாக இருக்கலாம் என்று நினைக்கையில் சிரிப்பு வந்தது சண்முகத்துக்கு.

         எப்படி இந்த பேருந்து நிலையத்தில் தன்னை மட்டும் தேர்ந்தெடுத்தான்,ஒருவேளை அடிக்கடி இங்கே தன்னை பார்த்திருப்பான் போல ஒவ்வொரு தேர்வுக்கும் தனியாக முதுகில் பேக் மாட்டிக்கொண்டு இந்த நடு ராத்திரியில் பஸ்ஸுக்காக காத்திருப்பது அதுக்காகத்தான் என்று நினைத்தானோ என்னவோ.தன் நிலைமையை நினைத்து உள்ளுக்குள்ளே சிரித்துக்கொண்டான்.

        என்ன படித்து என்ன?இந்நேரம் ஊரில் காட்டை கவனித்திருந்தாலாவது முப்பது மூட்டை நெல் அறுத்திருக்கலாம்,நான்கு வருடம் ஆயிற்று விதைத்து, கவனிக்க ஆளில்லாதால் கரம்பாக கிடக்கிறது.கவனித்துக்கொண்டிருந்த சித்தப்பாவும் மகன் படித்து வேலைக்குப் போயி பணம் கையில் புரள, தலையில் கட்டியிருந்த துவர்த்து தோளில் நிரந்தரமாக குடியேறியது,கௌரவம் கருதி கழனியை அப்படியே விட்டுவிட்டார்.தற்போது நெய்வேலிக்காரர்கள் பெரிய தொகைக்கு சுற்றியுள்ள இடத்தை வளைப்பதாக கேள்வி.போன வருடம் கூட பாட்டி வந்து சொல்லிவிட்டு போனாள்.

"அந்த காட்ட ஒரு எட்டு பாத்துட்டு போவ புடாதா கண்ணு,தாத்தன் மட்டும் எம்புட்டு நாளு உசிர புடிச்சிக்கிட்டு இருக்குறது"

"நீ வேற நா இங்க இஞ்சினியரிங்க் படிக்கறேன் இந்த வருசம் பூரா ப்ரஜக்ட்ல நான் பிசி" 

ஒன்றும் புரியாமல் சிரித்தாள் பாட்டி.சண்முகத்தின் ப்ராஜக்ட் மதுரை எலக்ட்ரனிக்ஸ் கடையில் பதினைந்தாயிரத்திற்கு மூன்று மணி நேரம் பேரம் பேசி வாங்கியது வேறு விசயம்.

             இந்த தலைமுறை இளைஞர்களின் நிலைமை பராவாயில்லை,சென்னை சென்றால் சஃப்ட்வேர் ,கால் சென்டர் என்று ஏராளமான வேலை கிடைக்கலாம் ஆனால் சண்முகத்திற்கு அதில் ஆர்வம் இல்லை,அந்த சூழ்நிலை தோதுபடாது என்று தோன்றியது.ஆண்டுக்கு தமிழ்நாட்டில் மட்டும் இரண்டு லட்சம் பேர் பொறியியல் முடித்து வருகிறார்கள்,ஏற்கனவே முடித்தவர்கள் வேறு,இதில் நம்மை எங்கே போய் தேடுவது,இருபது பேர் கொண்ட வகுப்பில் முதல் ரேங்க் எடுத்து வந்ததால் சிறு வயதில் சண்முகத்திற்கு உறவினர் மத்தியில் ஏக மதிப்பு,ஆனால்  லட்சக்கணக்கான சண்முகம் மத்தியில் இன்று அடையாளமற்ற ஒருவனாக,ஒருவேளை வாழ்தல் என்பது முகமிழந்து போவதுதானோ என்னவோ?இருந்தாலும் இந்த கூட்டத்தில் தன்னைத்தானே மீட்டெடுப்பதில்தான் வாழ்ந்ததற்க்கான திருப்பதி,வெட்ட வெட்ட  குருத்து வந்துகொண்டே இருக்கும் வாழைமரத்தில், எப்படியாவது வாழ்ந்துதீர வேண்டுமென்ற ஆசை.

          வீட்டிலும் முன்பு போல் இல்லை,சென்னைக்கு தேர்வு எழுதப் போகனும் பணம் கேட்டால் பெருமூச்சொன்று விட்டபிறகுதான் கிடைக்கிறது "என்னத்த எழுதி,கிழிச்சி"என்று நினைப்பார்கள் போல,போனமுறை NTPC தேர்வு,வீட்டில் கேட்டதற்கு பெரிய சலிப்பு,கையில் வைத்திருந்த நூற்றி ஐம்பது ரூபாயை வைத்துக்கொண்டு புறப்பட்டகிவிட்டது,சிதம்பரம் டூ தாம்பரம் ஐம்பத்தியைந்து அங்கிருந்து ரயில் டிக்கெட் பத்து ரூபாய்க்குள், போக வர நூற்றி இருபதுக்குள் முடிந்தது , சாப்பாடு,பிஸ்கெட் மற்றும் தண்ணீர் மட்டும்தான், இரவு கிளம்பி அடுத்த நாள் இரவு எட்டு மணிக்கு வந்து சேர்ந்தாகிவிட்டது ஒரு நாள் விரதம் அவ்வளவாக தெரியவில்லை.என்ன எழுதி
 என்ன? விடியலை காணொமே.. என்றாலும் நம்பிக்கை இருந்தது,கயிற்றின் அறாத ஒரு பிரியாய்.

மணி 12 காட்டியது,மனம் நிகழ்காலத்துக்கு பிடிபட மறுத்தது,லைட் அணைக்கப்பட்டு பேருந்து நகர்ந்து சிதம்பரம் எல்லையைத தாண்டி மிதமான வேகத்துடன் சென்றுகொண்டிருந்தது.

முன்னிருகையில் இருந்த ஜோடிகளின் ஊடல் உச்சக்கட்டத்தை எட்டியது போல தெரிந்தது,பின்னிருந்து பார்த்தால் தலை தெரியவில்லை,

எட்டி எட்டி பார்த்துக்கொண்டிருந்த பெரியவர், தன்னை கவனிப்பதை அறிந்து "காலம் கெட்டு போச்சி தம்பி,எங்க காலத்துலயெல்லாம்"னு ஆரம்பிக்க,

"ஆஹா ஏதுடா,இதுக்கு இவிங்களே தேவலாம் போல"னு நினைத்துக்கொண்டான் சண்முகம்.

இவர்களுக்கென்ன சொல்லிவிட்டார்கள்,"காலம் கெட்டு போச்சி".புலியை பாத்து பூனை சூடுபோட்ட கதை மாதிரி வெள்ளைக்காரனை பார்த்து அவனடி தொடர்ந்து வந்தவர்கள் தானே இவர்கள்.கலாச்சார மாற்றத்தை திணித்தவர்களே இவர்களுடைய தலைமுறைதானே.வசதி படைத்தவர்கள் இந்த மாற்றத்தின் பலனை அனுபவிக்கிறார்கள்.இல்லாதவர்கள் நெருக்கப்படுகிறார்கள்.

            பேருந்து நல்ல வேகத்தில் சென்றுகொண்டிருந்தது,புழுதியும் அனலும் சேர்ந்த காற்று மாறி இதமான குளிர்ச்சியான காற்று சன்னல் வழியாக குபுகுபு என்று முகத்தில் அடித்துக்கொண்டிருந்தது.தூசி முகத்தில் அடித்தாலும் சன்னலோர பயணம் சண்முகத்துக்கு எப்போதுமே சுகமாகத்தான் இருந்தது அப்படியே கம்பியில் சாய்ந்து சற்று கண்மூடினான்,தூக்கம் பிடிபடவில்லை,நினைவுகள் தடம் மாறிக்கொண்டே இருந்தது...

                                          ---தொடரும்-----