Monday, 25 March 2013

காளையும் பின்னே ஒரு பரிணாம வளர்ச்சியும்


வெயிலில் வெந்து தகித்துப்போன தார் சாலை பின்னிரவின் இலேசான குளிரில் இளைப்பாறிக் கொண்டிருந்தது.கிடைத்ததை தின்று அரை குறை வயிற்றுடன் நகரின் பிரதான சாலையோரம் கோயில் அருகில் இருந்ததால் வெட்டாமல் விட்டு வைத்திருந்த அரசமரத்தடியில் உட்கார்ந்து அசைபோட்டுக்கொண்டிருந்தது கொம்பன் காளை.அப்படியொன்றும் விருந்து இல்லை,இருந்த இடத்திலே சகலமும் தேடி வந்த காலம் கனவுபோல் ஆகிவிட்டது, ஒரு வேளை வயிறு நிறையவே  இப்போது நாள் முழுவதும் நகரத்தில் சுற்ற வேண்டியிருக்கிறது, குடியிருப்பு பகுதிகள் என்றால் பாலித்தீன் பைகளில் சுருட்டி போட்ட காய்கறி மிச்சங்கள் அல்லது உணவு எச்சங்கள் தாகத்திற்க்கு கழிவு நீர்தான் இன்னும் மார்கெட்டில் பொழுது போன நேரம் பார்த்து கிடைத்த அழுகின முட்டைக்கோஸ்,தக்காளி,கீரை வகைகள், அதுவும் இல்லாத சமயம் சாலைகளில் நடந்தால் புதுப்பட சினிமா அல்லது பிறந்த நாள் காணும் அரசியல் தலைவர்களின் சுவரொட்டிகள் சில நேரங்களில் இவை கூட கிடைப்பது கடினம்தான்.ருசியாக எள்ளு, கடலை, பருத்திப் பிண்ணாக்கு, பார்த்து வருடங்கள் ஆகியிருக்கும்.

சரி அப்படியே மெதுவாக உலாத்திவிட்டு வரலாம்.கூட துணையும் இல்லை,தான் ஒட்டிக்கொண்டிருந்த கூட்டத்திலிருந்து பிரிந்து வந்து  சில காலம் ஆகிறது. சுற்றும் பார்த்துவிட்டு மெதுவாக சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்தது. பின்னங்கால் ஒன்றில் உடைத்துப்போட்ட கண்ணாடி சில்லு கால் குளம்பில் ஏறி  இழுத்துக்கொண்டு நடந்தது காளை.நன்றாக நினைவிருக்கிறது பார வண்டி இழுத்த நாட்கள், அப்போதெல்லாம் தினமும் மூண்று வேளை தவிடு, வடி கஞ்சி, ஞாயிறு நாட்களில் பிண்ணாக்கு. அவ்வ போது காளையேறுதல் கூட, அதுதான் கொம்பன் கடைசியாக மகிழ்ச்சியுடன் இருந்த நாட்கள், உரிமையாளர் ரிக்ஸா ஒன்று வாங்கி விட்டதால் வளர்த்த பாசம் காரணமாக கறிக்கு அனுப்பாமல் அவிழ்த்து விட்டுவிட்டார். சில நாட்கள் அங்கேயே சுற்றி வந்துவிட்டு  பின் அங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்ட போது செல்ல இடம் தெரியாமல் சுற்றி திரிந்து ஒரு கூட்டத்தில் சேர்ந்து, அலைந்து ஒன்றாக புசித்து சில பல நாட்டு ரக பசுக்களுக்கு பேருந்து நிலையத்திலோ அல்லது காய்கறி சந்தையிலோ கன்று வரம் கொடுத்து ஓடியது சில நாட்கள்.

கடைகள் அடங்க ஆரம்பித்திருந்தன, சுற்றி வந்தது காளை. நாய் ஒன்று 'வள்'ளென்று குரைத்தது, மிரண்டு அப்பக்கம் ஒடியது. தண்ணீர் இருந்தால் தேவலாம்,மைதா தடவிய போஸ்டரை சாப்பிட்டதில் தாகமாக இருந்தது, குடிப்பதற்க்கு தண்ணீர் கிடைப்பதோ மனித உருவத்தில் இருந்தால் தான் சாத்தியம் போல் தெரிகிறது.ஆழ்துளை கிணறுகள் வெட்டவோ இல்லை அக்வாகார்ட் உபயோகிக்கவோ தோதாக உடல் அமைப்பும் இல்லை நினைத்து பெருமூச்சு விட்டது. சிரமம்தான் மிருகமாய் இருப்பது அதுவும் மனிதனிடம் வளர்ந்துவிட்டு பின் விரட்டியடிக்கப்பட்டு இப்படி உணவுக்காக திரிவதென்றால் கொடுமையாகத்தான் உணர்ந்தது. தார் சாலை நேற்றுதான் புதிதாக போட்டது போல,வாகனங்கள் சென்று தெறித்த சிறு சிறு கற்கள் கண்ணாடி சில்லு ஏறிய காலை பதம் பார்த்தது.வலியுடன் முனகியது.

பசி,வலி போன்ற இயற்கையின் உந்துதல்களை அந்தந்த உடலுறுப்புகள் கூட தாங்கிக்கொள்ளக்கூடும் அவை ஏற்படுத்தும் உளவியல் சார்ந்த பிரச்சனைகளை சமாளிக்க கடினமாகத்தான் இருந்தது.சில வருடங்களாகத்தான் இந்த தன் உணர்வு தானும் மற்றக் காளைகளை போல எந்தப் பிரக்ஞையும் இல்லாமல் இருந்திருந்தால் இந்த மன சஞ்சலம் 

வந்திராது.மற்ற மாடுகள் இப்படியில்லையே நடந்தது நடக்கப்போவது இதைப்

பற்றிய எவ்வித உணர்வும் இல்லாமல்லவா சுற்றித் திரிகின்றன.

தன் நிலைமையை நினைத்து நொந்து குட்டிச்சுவர் ஒன்றில் கொம்பால்      முட்டிக்கொண்டது.தனக்கு மட்டும் ஏன் இப்படி, இத்தனை நாட்கள் தன் இனம் காணாத சுய உணர்வு எப்படி?


மாடுகளின் நாட்காட்டியில் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு..

ஊரின் ஒதுக்குப்புறத்தில் ஆளரவமற்ற பகுதி.சிதிலமடைந்த கோயில்.சுற்றி ஆங்காங்கே சிதறியனவாக அமர்ந்திருந்த, தலை,கை,கால்கள் இல்லாத தியான நிலை சிற்பங்கள்.கடுமையாக எப்போதோ சேதப்படுத்தப் பட்டிருந்தன.பழமை வாய்ந்த இடமாகத் தோன்றியது.ஆங்கே ஒரு அரச மரத்தடியில் கொம்பன் தன் கூட்டத்துடன் உட்க்கார்ந்து மந்தகாசமாக அசைபோட்டுக் கொண்டிருக்கும் போது சற்றே இது மட்டும் கண் அயர்ந்தது.நேரம் போனது தெரியவில்லை, திடீரென்று  ஒரு உதறல் தலையை சிலுப்பிக்கொண்டு எழுந்தபோது உடல் ரோமமெல்லாம் குத்திட்டு நின்றது.குளிராக இருக்கும் என்று நினைத்துக் கொண்டது, எழுந்து சோம்பல் முறித்தது.கெட்ட கனவொன்று கண்டது போல் இருந்தது.என்ன கனவென்று தெரியவில்லை. சுற்றிலும் வேறு பசுக்களோ காளைகளோ கூட இல்லை,எல்லாம் மேய்ச்சலுக்கு சென்று விட்டன.

அந்த சிதிலமடைந்த கட்டிடத்தில் ஒரு சிலை அதற்கு ஒரே ஒரு கண் இன்னொரு கண் உடைந்திருந்தது.உடல் தவமிருக்கும் நிலையில்,அந்த கண் தன்னையே பார்ப்பதுபோல் இருக்கவே  கொம்பன் ஒன்றும் அறியாததுபோல் தலையை  வேறுபக்கம் திருப்பிக் கொண்டது.ஆனால் உடலில் ஒருவித வைப்ரேசன்,எனர்ஜி.

அப்போது ஒன்றும் உறைக்கவில்லை, அடுத்த நாளும் அதே இடத்திற்க்கு செல்ல வேண்டும் போல் இருந்தது.அந்த அதிர்வை,எனர்ஜியை மறுபடியும் அனுபவிக்க வேண்டுமாய் இருந்தது கொம்பனுக்கு.அடுத்த நாளும் மற்ற காலைகள் ஓய்வெடுத்து சென்ற பின் கொம்பன் மட்டும் அங்கு நின்று சிலையை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தது.இன்றும் அதே வைப்ரேசன்.

அதாவது,

பல ஆண்டுகளுக்கு முன்பு கோயில்களில் புத்த விகாரமே இருந்ததாகவும் பின் வந்த மன்னர்களால் அது இடிக்கப்பட்டதாகவுமான ஒரு வரலாறு நாம் சமகாலத்தில் அறிந்ததே.கொம்பன் கிடைத்ட அனுபவம் கூட இந்த புத்த விகாரையால்தன்.ஆதலால் சந்தேகமே வேண்டாம் கொம்பனுக்கு கிடைத்த அந்த வைப்ரேசன்,காளைக்கு போதி நிலை அடைந்தது.பிறவியெனும் பந்தம் அறுந்தது.

இவ்வளவு சுலபமாகவா என்றால் ஆம் இல்லை என்றால் இல்லை.

நாளடைவில் கொம்பன் புத்த விகாரே தவமாகக் கிடந்தது.

இப்படியாக ஒரு வாரம் செல்லவே காளையின் நடவடிக்கைகளில் நிறைய மாற்றம் இருந்ததை சக மாடுகள் கண்டு கொள்ள ஆர்ம்பித்தன.உணவு தேடியலைந்தது போக மற்ற நேரங்களில் சிதிலமடைந்த கோயிலின் முன் உட்க்கார்ந்து கண்களை மூடி தியானம் செய்வதும், (மாடுகள் கால்கள் பிண்ணி அமர்ந்து தியானம் செய்வது சாத்தியமில்லையென்றாலும் கொம்பன் தன் பின்னங்காள்களை தரையில் மடித்து உட்க்கார்ந்தும் முன்னங்கால்களை முகத்துக்கு நேரே நீட்டிக்கொண்டும் தியானம் செய்தது ஒன்றும் வியப்பில்லை, இதை கற்பனை செய்து பார்ப்பதற்க்கு வாசகர்கள் தடுமாறலாம் ஆனாலும் வேறு வழியில்லை இக்கதையின் கரு அப்படி).

சில நாள் நடுநிசியில் திடீரென தலை சிலுப்பி சன்னதம் கொண்டு ஆடுவதும்,எதாவது கேட்டால் மோன நிலையில் வாயோரம் புத்தரை போல மெலிதாக ஒரு புன்னகை புரிவதுமாக,காளை புன்னகை புரிகிறதென்றால் நம்ப முடியாமல்தான் உள்ளது ஆம் அது அப்படித்தான்.சக காளைகள் கொம்பனின் அருகில் வரவே தயங்கின.நாட்கள் உருண்டோட  மற்ற காளைகள் போல் கொம்பனால் இருக்கமுடியவில்லை, தனக்குள்ளேயே முனுமுனுத்துக் கொண்டு திரிந்தது.கேட்டால் மந்தகாசமாக ஒரு புன்னகை.

அதன் பிறகு எப்போதும் கூட்டத்தை விட்டு தனித்து செல்லவே விரும்பியது கொம்பன்.உணவு தேடும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் ஏதோ சிந்தனையிலேயே ஆழ்ந்திருந்தது,பசி எடுக்கிற சமயம் மட்டும் ஏன் எதுவும் சிந்திக்க தோன்றவில்லை என்றும் சிந்தித்து பார்த்தது,ஒன்றும் மட்டுப்படவில்லை.

ஒரு சமயத்தில் இது மாதிரி கோளாறான சிந்தனைகள் அலுப்பை உண்டாக்கியது,காரணம் இயற்க்கையின் உந்துதல்கள்,காளையேறி பல நாட்கள் ஆகிறது மறுபடியும் தன் கூட்டத்திலே சேரலாம்,மனிதனின் சுபாவங்கள் சிலவற்றை காளை தன் கூட்டத்திடம் பிரயோகித்து பார்க்கலாம் என்று நினைத்தது.

ஒரு நாள் நிசியில் சன்னதம் கொண்டு எழுந்து ஆடி சக மாடுகளை கூட்டி தனக்கு போதம் வந்துவிட்டதாகவும்.நான் சாதாரன காளை மாடு இல்லையென்றும் நான் உங்களின் மீட்பர் என்றும் அதை தன் கனவில் இறக்கையுடன் கூடிய இரண்டு கெடாரிகள் வந்து சொன்னதாகவும்,கூறவே முதலில் யாரும் நம்பவில்லை. சில இளங்க்காளைகள் சிரித்துக் கொண்டன. சில கன்றுகளும் அதன் தாய் பசுக்கள் மட்டும் பயத்துடன் கேட்டுக் கொண்டிருந்தன.

இருந்தாலும் காற்று கொம்பனுக்கு சாதகமாகவே வீசியது.

பின்னாளில் கொம்பன்  தன்னை  நம்பும் சில காளைகளையும் சில ஜெர்சி ரக பசுக்களையும் கூட்டி கோயிலின் அருகில் இருக்கும் அரசமரத்தடியில் பிரசங்கம் உபாசனைகளும் நடந்தேற்றியது.  நாளைடவில் பக்கத்து ஊர் நாட்டு பசுக்களுக்கும்  செய்தி பரவி கொம்பனை கேட்க்க வரும் கூட்டம் அதிகமாகிக் கொண்டே இருந்தது.மரத்தடியில் வெட்டவெளி ஆசிரமம் ஏற்படுத்தும் அளவிற்க்கு பிரசித்தி பெற்றது. கொம்பனான்டி என்றால் தெரியாத மாடுகளே கிடையாது சுற்று வட்டாரத்தில்.காளைகள் சிஷ்ய கோடிகளாக சேர்ந்து பணிவிடை செய்தன.இரவு நேரங்களில் சில உயர்ரக சிந்திப் பசுக்களை அழைத்து வந்து பஜனை நடந்ததாக வந்த செய்தி  கொஞ்சம் மிகையாக இருக்கலாம். செக்ஸ் ஆராய்ச்சி என்று சொல்லி சமாளிப்புகள் நடந்தன. எதிர்ப்புகளும் எழாமலில்லை.

சிறிது நாட்கள் இப்படியாக ஓடியது,ஆனாலும் உண்மையை  அறைகுறையாக  அறிந்தவன் உறங்கியதில்லை, கொம்பனுக்கு இந்த வாழ்க்கை முறையும் சலித்துதான் போனது, தான் தேடிப் புல் மேய்ந்து தினம் பல காளையேறி வெயிலேறி தகிக்கும் தார் சாலைகளில் சாணி போட்டு  உழன்று மடியும் இனமில்லை என்ற எண்ணம் சிந்தையை உலுக்கிக் கொண்டே இருந்தது.ஒரு நாள் தான் வடதிசை நோக்கி நான்கு கால்நடையாக பிரயாணம் போகப் போறதாகவும் தன்னுடன் வருபவர்கள் வரலாமென்று கூறவே சிஷ்ய மாடுகள் மறுக்க ஆசிரம பணிகளை அதுகளிடம்  ஒப்படைத்துவிட்டு கிளம்பியது.

வடதிசை பிரயாணங்களின் போது சில நாட்கள் பெருநகரங்களில் சுற்றியது. அங்கு உயிரினங்கள் வாழ தோதான சூழ்நிலைகள் இல்லையென்று அறிந்துகொண்டது.கண்ணுக்கு எட்டின தூரம் வரை புல்பூண்டையே காணும்,மனித இனம் மட்டும் எப்படி பிழைக்கிறது என்பது ஆச்சர்யமாகதான் இருந்தது,பின் மிகவும் பிரயத்தனம் செய்து அந்த உண்மையை தெரிந்து கொண்டது.அதை யாரிடமும் சொல்வதாக இல்லை.

வட திசை பயணத்தின் ஒரு நாளில் டெக்கான் பீடபூமியில் மார்கழி இரவுக் குளிரில் மனம் அலைபாயவே எழுந்து நான்கு கால் போனபோக்கில் நடந்தது. தூரத்தில் மூன்று இளங்காளைகள் ஒன்றை ஒன்று முட்டி விளையாடிக் கொண்டிருந்தன, அருகில் மங்கிய வெளிச்சத்தில் ஒரு பசு நிற்பது தெரிந்தது. வெட்டவெளி ஆசிரமத்தில் நாளைக்கு ஐந்து என்று ஏறிய காலமெல்லாம் இல்லை, போராடுவது சிரமம், பேசி மயக்கி வேண்டுமானால் பார்க்கலாம் மனித காளைகள் போல. "இது வேலக்கி ஆகாது" இருந்தாலும் முயற்சி செய்து பார்த்தது,சமாளிக்க முடியவில்லை,சிறு காயங்களுடன் தப்பித்து ஓரமாக வந்து நின்றது,ஒன்றும் பலனில்லை.பார்த்து ரசிக்க மட்டுமே முடிந்தது.

சிரித்துக்கொண்டே தோற்றுப்போன காளைகளோடு சேர்ந்து திரும்பி நடந்தது.மனிதனின் குணங்கள் தனக்கும் தொற்றிக் கொண்டதை நினைத்து வெட்கிய நேரம் முகத்தில் சுளீரென்று வெளிச்சம் அடித்தது. அதிலிருந்து இரண்டு மனித உருவங்கள் கரிய நிழல் போல தன் முன்னால் நெருங்கி வருவது தெரிந்தது.நெருங்க நெருங்க ஏதோ ஆபத்து வருகிறது என்று மட்டும் சூதாரித்து ஒரு முடிவுக்கு வந்த நேரம் கொம்பனும் மற்ற காளைகளும் ஒரு டெம்போ வேனில் ஏற்றப்பட்டு பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தன.பின் கொம்பன் ஒற்றைக் காளையாக குடோனில் அடைப்பட்டிருந்த தன் சக மாடுகளையெல்லாம் காப்பாற்றி வெளியே வந்ததெல்லாம் வேறு கதை.
                                                                                                   
அது நடந்த ஆகிறது பல காலம்.இந்த இருபத்தைந்து வருடங்களில் எங்கும் சுற்றி இறுதியில் ஆரம்பித்த இடத்திற்க்கே வந்து சேரத்தான் முடிந்தது.பழைய நினைவுகள் வருவதும் போவதுமாக இருந்தது. பின்னிரவு நேரம்,சாலைகளில் மனித நடமாட்டம் மங்கியிருந்தது,அப்போதும் கூட மனிதன் பிற உயிர்களை நடமாட விடுவது கிடையாது,சுளீரென்று முதுகில் அடி விழுந்தது காளைக்கு, பழக்கடையை மூடிக்கொண்டிருந்த கடைக்காரன் கத்தினான், துள்ளிக் கொண்டு சாலையின் அப்பக்கம் ஓடியது.எதை வைத்து அடித்தான் என்று தெரியவில்லை,அடித்த இடம் எரிந்தது.சாலையின் ஓரமாக சென்று பின்னங்கால்களை மட்டும் மடக்கி உட்க்கார்ந்து மூத்திரம் கால்களில் தெளிக்காமல் பெய்தது.எரிச்சலாக இருந்தது.ஹஸ்த பாதாங்குதாசனம் கற்றுக்கொண்டது வசதியாக போயிற்று. நிறைய தெரிந்துகொண்டுதான் இருந்தது இத்தனை வருடங்களில். பயணங்கள் என்றுமே அலுத்துபோனதில்லை இந்த காளைக்கு.

தன் இருபத்தைந்தாண்டு பயணங்களில் மனிதர்களின் நடவடிக்கைகள் ஆச்சர்யமூட்டுவதாகவே இருந்தது.மனித இனம் தன் இனத்தை விருத்தி செயவதை ஒரு தொழிலாகவே செய்வதை அறிந்து திகைத்தது.பசுவை ஏமாற்றி பால் கறக்கும் விதத்தையும் மேலும் பசுவை சிணை பிடிக்க வைக்க வெள்ளைக் கோட் போட்ட ஒரு மனிதன் ஊசி போன்று கையில் வைத்திருக்கும் தன் ஆண் குறியை பயன்படுத்துகிறானென்றும் அந்த குறியை எளிதாக தேவைப்படும் போது உபயோகித்து கொள்ளவும் குளிர்பெட்டியில் வைக்கவும் செய்கிறான் என்பதையும் அறிந்து மிரண்டு போனது.அதிகம் தெரிந்து கொள்வதும் ஆபத்தானதுதான்.

எல்லாம் தெளிவு பெற்றும் ஒரு குறை இருந்தது.அதுதான் மொழி ஆளுமை. பின் அது ஒன்றும் பெரிதாக தெரியவில்லை.சாட்சாத் சரஸ்வதி தேவியை நோக்கி பத்து திங்கள் ஒரு மலையடிவாரத்தில் தவம் இருக்கவே அந்த வரமும் கிடைத்துப் போனது. பின் சில பல மனித மொழிகளை  படிக்கவும் கற்றுக்கொண்டது. ஆய்வுக் கட்டுரைகள் எழுதும் அளவிற்க்கு இல்லை யென்றாலும் ஓரளவிற்க்கு புலமை பெற்றிருந்தது. அஃறினைகளுக்கு இது எப்படி சாத்தியம் என்று கேட்க வாசகர்கள் முயல வேண்டாம்,கதை ஒரு வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறது, விட்டு விடுங்கள்,அவ்வபோது குப்பையில் கிடைக்கும் நாளிதழ்கள், வார இதழ்கள் மூலம் மனித இனத்தின் நாட்டு நடப்பு செய்திகளை தெரிந்து கொண்டது. பின் ஹிந்தி, அங்கிலம் போன்ற மொழிகளும் எழுதப் படிக்க கற்றுக்கொண்டது. முதலில் ஹிந்தி கற்க நேரும்போது மனதுக்குள் ஹிந்தி எதிர்ப்பு துளிர்விட்டது.வேறு வழியில்லை தன்னைப் போன்ற நாடோடிகளுக்கு மொழி பேதம் ஏது, ஹிந்தி எதிர்ப்பை வெளிப்படுத்தி  அடையப்போவது ஒன்றுமில்லை.

உயிரியல் தத்துவங்களுக்கும் குறையில்லை.குப்பையில் கிடந்த பள்ளி மாணவனின் விடைத்தாளிலிருந்து டார்வின் கொள்கையையும் மனித உடலின் அனாட்டமியையும் அறைகுறையாக தெரிந்து கொண்டது.பரிணாம வளர்ச்சியின் பயனாக உயிரினங்களின் தலை,கை,கால்கள் ஆகியவற்றை தேவைக்கேற்ப நீட்டி,முழக்கி வடிவமைத்துக் கொள்ளலாம் என்பதை அறிந்து தன் கால்களை வளைத்து நெளித்து பார்த்தது. பின்னங்கால்களில் பாதி எழுந்து நின்று விட்டை போட்டுவிட்டு முன்னங்கால்களை பின்னால் வளைத்து தண்ணீர் ஊற்றி அலம்ப முயற்சி செய்து பார்த்து பின் இது அதீத கற்பனை என்பதையும் உணர்ந்து மனதுக்குள் சிரித்துக் கொண்டது.அந்த முயற்ச்சியை கைவிடாமல் தோதாக சில யோகாசன முறைகளையும் பழகிப் பார்த்தது.

நாட்கள் செல்ல செல்ல மெதுவாக புரியத் துவங்கியது தான் பரிணாம வளர்ச்சியின் ஆரம்பத்தில் இருக்கிறோம் என்று.தான் ஒரு காளை என்றும் அது மனித இனம் தங்களுக்கு பொதுவாக சூட்டிய பெயர் என்றும் தெரிந்து கொண்டது.

அவ்வபோது சில அரசியல் கட்சி கூட்டங்களையும் தொண்டர்கள் பின் ஒரு ஓரமாக உட்க்கார்ந்து கேட்க்க வாய்ப்பிருந்தது,எல்லாம் செய்தாலும் வயிற்றுப் போராட்டம் பெரும்பாடாகவே இருந்தது.சில நேரங்களில் உடல் பசிக்கு துணை தேடுவதும் அறிதாகவே நடந்தது.காலையேறி வருடம் இருக்கும், தியானம்,யோகாசன பயிற்சி  காரணமாக அதை துறந்தாகிவிட்டது, சில முறை கட்டுப்படுத்த முடியவில்லை. இது மாதிரி நேரங்களில் மனித இனம் தன் கைகளை பயன்படுத்திக்கொள்ளும் என்பதை ஒரு பருவ இதழில் கொம்பன் படித்திருந்தது.தனக்கு அந்த வசதி இல்லையென்று நினைக்கும் போது தாங்கொனா துயரில் ஆழ்ந்தது.

எத்தனை படிப்பிணைகள்,தன் வாழ்வு மற்ற காளைகள் போலல்லாமல் இனிதே முற்று பெற்றுவிட்டதாக உணர நேர்ந்தாலும் அநேக நேரம் நிம்மதி இழந்து தவித்தது. அது தூங்கிப்போன சிந்தையை எழுப்பிக் கொண்டே இருந்தது.

குடலில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்த உலோகத் துகள்கள் வயிற்றில் ஏற்படுத்திய அரவம் காளையின் குடலை அரித்துக்கொண்டே இருந்தது இன்னும் எத்தனை நாட்கள் என்று தெரியவில்லை.தான் சிந்தித்தவற்றை எப்படி அடுத்த தலைமுறைக்கு கொண்டுபோக போகிறோம் என்று நினைக்கையில் துயரம் உணவுக் கவளம் வைத்திருந்த தொண்டையை அடைத்தது.துயரத்தை அடக்கி கவளத்தை மறுபடியும் வாயில் கொண்டு சென்று அசைப்போட்டது.

எவ்வளவு நேரம் சாலையோரங்களில் குப்பைகளை மேய்ந்தாலும் பசி மட்டும் அடங்காதுபோல.எழுந்து மறுபடியும் நடந்தது.சுவற்றில் புதுப்பட போஸ்டர் ஒட்டியிருந்தது. அதில் இருந்த மனிதனின் உருவத்தை மிரட்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தது, அந்த போஸ்டரை அப்படியே விட்டுவிட்டு பக்கத்தில் "பருவ ராகம்" என்ற படப் போஸ்டர் ஒட்டியிருந்தது.அதை கிழித்து திண்று பசியை தீர்த்துக்கொண்டது. பசி அடங்கவில்லை, திரும்பி நடப்பது வீண்,காலையில் பார்த்துக் கொள்ளலாம்.சாதாரன காளையாக இருந்து கிடைத்ததையாவது அனுபவித் திருக்கலாம் என்ற எண்ணமும் வந்து போகாமல் இல்லை.முதலில் இந்த பாரத்தை இறக்கி வைத்தால் தேவலாம் போல் இருந்தது. மிதமாக வீசும் குளிர் காற்று என்னவோ செய்தது.சினிமா சுவரொட்டியை பார்த்ததிலிருந்து மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது.

ஊருக்கு வெளியில் சென்று பச்சையாக ஏதும் மேய்ந்து பார்க்கலாம் என்றாலும் போகப்போக நீண்டுகொண்டே செல்கிறது நகரத்தின் ஆக்கிரமிப்பு , அதற்க்கு பேசாமல் இங்கேயே கடைத் தெருவில் மீந்து போனது எதாவது கிடைக்கும். வாயிலும் கண்களிலும் நீர் ஒழுக அலைந்தது.தனக்கு இவ்வளவு ஞானம் கிடைத்தாலும் அதை வைத்துக்கொண்டு நாள் முழுக்க சிந்தனை செயவது தவிர வேறொன்றும் செய்வதற்க்கில்லை என்பதை நினைத்து மனம் வேதனை அடைந்தது. தூக்கம் வராமல் உலாத்தியதில் களைத்துப் போயிருந்தது.சுற்றும் முற்றும் பார்த்து உட்க்கார்ந்து மீண்டும் பழைய நினைவுகளை அசைப்போடத் துவங்கியது.
                                                 
                                                        ----தொடரும்----