Monday, 25 March 2013

காளையும் பின்னே ஒரு பரிணாம வளர்ச்சியும்


வெயிலில் வெந்து தகித்துப்போன தார் சாலை பின்னிரவின் இலேசான குளிரில் இளைப்பாறிக் கொண்டிருந்தது.கிடைத்ததை தின்று அரை குறை வயிற்றுடன் நகரின் பிரதான சாலையோரம் கோயில் அருகில் இருந்ததால் வெட்டாமல் விட்டு வைத்திருந்த அரசமரத்தடியில் உட்கார்ந்து அசைபோட்டுக்கொண்டிருந்தது கொம்பன் காளை.அப்படியொன்றும் விருந்து இல்லை,இருந்த இடத்திலே சகலமும் தேடி வந்த காலம் கனவுபோல் ஆகிவிட்டது, ஒரு வேளை வயிறு நிறையவே  இப்போது நாள் முழுவதும் நகரத்தில் சுற்ற வேண்டியிருக்கிறது, குடியிருப்பு பகுதிகள் என்றால் பாலித்தீன் பைகளில் சுருட்டி போட்ட காய்கறி மிச்சங்கள் அல்லது உணவு எச்சங்கள் தாகத்திற்க்கு கழிவு நீர்தான் இன்னும் மார்கெட்டில் பொழுது போன நேரம் பார்த்து கிடைத்த அழுகின முட்டைக்கோஸ்,தக்காளி,கீரை வகைகள், அதுவும் இல்லாத சமயம் சாலைகளில் நடந்தால் புதுப்பட சினிமா அல்லது பிறந்த நாள் காணும் அரசியல் தலைவர்களின் சுவரொட்டிகள் சில நேரங்களில் இவை கூட கிடைப்பது கடினம்தான்.ருசியாக எள்ளு, கடலை, பருத்திப் பிண்ணாக்கு, பார்த்து வருடங்கள் ஆகியிருக்கும்.

சரி அப்படியே மெதுவாக உலாத்திவிட்டு வரலாம்.கூட துணையும் இல்லை,தான் ஒட்டிக்கொண்டிருந்த கூட்டத்திலிருந்து பிரிந்து வந்து  சில காலம் ஆகிறது. சுற்றும் பார்த்துவிட்டு மெதுவாக சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்தது. பின்னங்கால் ஒன்றில் உடைத்துப்போட்ட கண்ணாடி சில்லு கால் குளம்பில் ஏறி  இழுத்துக்கொண்டு நடந்தது காளை.நன்றாக நினைவிருக்கிறது பார வண்டி இழுத்த நாட்கள், அப்போதெல்லாம் தினமும் மூண்று வேளை தவிடு, வடி கஞ்சி, ஞாயிறு நாட்களில் பிண்ணாக்கு. அவ்வ போது காளையேறுதல் கூட, அதுதான் கொம்பன் கடைசியாக மகிழ்ச்சியுடன் இருந்த நாட்கள், உரிமையாளர் ரிக்ஸா ஒன்று வாங்கி விட்டதால் வளர்த்த பாசம் காரணமாக கறிக்கு அனுப்பாமல் அவிழ்த்து விட்டுவிட்டார். சில நாட்கள் அங்கேயே சுற்றி வந்துவிட்டு  பின் அங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்ட போது செல்ல இடம் தெரியாமல் சுற்றி திரிந்து ஒரு கூட்டத்தில் சேர்ந்து, அலைந்து ஒன்றாக புசித்து சில பல நாட்டு ரக பசுக்களுக்கு பேருந்து நிலையத்திலோ அல்லது காய்கறி சந்தையிலோ கன்று வரம் கொடுத்து ஓடியது சில நாட்கள்.

கடைகள் அடங்க ஆரம்பித்திருந்தன, சுற்றி வந்தது காளை. நாய் ஒன்று 'வள்'ளென்று குரைத்தது, மிரண்டு அப்பக்கம் ஒடியது. தண்ணீர் இருந்தால் தேவலாம்,மைதா தடவிய போஸ்டரை சாப்பிட்டதில் தாகமாக இருந்தது, குடிப்பதற்க்கு தண்ணீர் கிடைப்பதோ மனித உருவத்தில் இருந்தால் தான் சாத்தியம் போல் தெரிகிறது.ஆழ்துளை கிணறுகள் வெட்டவோ இல்லை அக்வாகார்ட் உபயோகிக்கவோ தோதாக உடல் அமைப்பும் இல்லை நினைத்து பெருமூச்சு விட்டது. சிரமம்தான் மிருகமாய் இருப்பது அதுவும் மனிதனிடம் வளர்ந்துவிட்டு பின் விரட்டியடிக்கப்பட்டு இப்படி உணவுக்காக திரிவதென்றால் கொடுமையாகத்தான் உணர்ந்தது. தார் சாலை நேற்றுதான் புதிதாக போட்டது போல,வாகனங்கள் சென்று தெறித்த சிறு சிறு கற்கள் கண்ணாடி சில்லு ஏறிய காலை பதம் பார்த்தது.வலியுடன் முனகியது.

பசி,வலி போன்ற இயற்கையின் உந்துதல்களை அந்தந்த உடலுறுப்புகள் கூட தாங்கிக்கொள்ளக்கூடும் அவை ஏற்படுத்தும் உளவியல் சார்ந்த பிரச்சனைகளை சமாளிக்க கடினமாகத்தான் இருந்தது.சில வருடங்களாகத்தான் இந்த தன் உணர்வு தானும் மற்றக் காளைகளை போல எந்தப் பிரக்ஞையும் இல்லாமல் இருந்திருந்தால் இந்த மன சஞ்சலம் 

வந்திராது.மற்ற மாடுகள் இப்படியில்லையே நடந்தது நடக்கப்போவது இதைப்

பற்றிய எவ்வித உணர்வும் இல்லாமல்லவா சுற்றித் திரிகின்றன.

தன் நிலைமையை நினைத்து நொந்து குட்டிச்சுவர் ஒன்றில் கொம்பால்      முட்டிக்கொண்டது.தனக்கு மட்டும் ஏன் இப்படி, இத்தனை நாட்கள் தன் இனம் காணாத சுய உணர்வு எப்படி?


மாடுகளின் நாட்காட்டியில் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு..

ஊரின் ஒதுக்குப்புறத்தில் ஆளரவமற்ற பகுதி.சிதிலமடைந்த கோயில்.சுற்றி ஆங்காங்கே சிதறியனவாக அமர்ந்திருந்த, தலை,கை,கால்கள் இல்லாத தியான நிலை சிற்பங்கள்.கடுமையாக எப்போதோ சேதப்படுத்தப் பட்டிருந்தன.பழமை வாய்ந்த இடமாகத் தோன்றியது.ஆங்கே ஒரு அரச மரத்தடியில் கொம்பன் தன் கூட்டத்துடன் உட்க்கார்ந்து மந்தகாசமாக அசைபோட்டுக் கொண்டிருக்கும் போது சற்றே இது மட்டும் கண் அயர்ந்தது.நேரம் போனது தெரியவில்லை, திடீரென்று  ஒரு உதறல் தலையை சிலுப்பிக்கொண்டு எழுந்தபோது உடல் ரோமமெல்லாம் குத்திட்டு நின்றது.குளிராக இருக்கும் என்று நினைத்துக் கொண்டது, எழுந்து சோம்பல் முறித்தது.கெட்ட கனவொன்று கண்டது போல் இருந்தது.என்ன கனவென்று தெரியவில்லை. சுற்றிலும் வேறு பசுக்களோ காளைகளோ கூட இல்லை,எல்லாம் மேய்ச்சலுக்கு சென்று விட்டன.

அந்த சிதிலமடைந்த கட்டிடத்தில் ஒரு சிலை அதற்கு ஒரே ஒரு கண் இன்னொரு கண் உடைந்திருந்தது.உடல் தவமிருக்கும் நிலையில்,அந்த கண் தன்னையே பார்ப்பதுபோல் இருக்கவே  கொம்பன் ஒன்றும் அறியாததுபோல் தலையை  வேறுபக்கம் திருப்பிக் கொண்டது.ஆனால் உடலில் ஒருவித வைப்ரேசன்,எனர்ஜி.

அப்போது ஒன்றும் உறைக்கவில்லை, அடுத்த நாளும் அதே இடத்திற்க்கு செல்ல வேண்டும் போல் இருந்தது.அந்த அதிர்வை,எனர்ஜியை மறுபடியும் அனுபவிக்க வேண்டுமாய் இருந்தது கொம்பனுக்கு.அடுத்த நாளும் மற்ற காலைகள் ஓய்வெடுத்து சென்ற பின் கொம்பன் மட்டும் அங்கு நின்று சிலையை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தது.இன்றும் அதே வைப்ரேசன்.

அதாவது,

பல ஆண்டுகளுக்கு முன்பு கோயில்களில் புத்த விகாரமே இருந்ததாகவும் பின் வந்த மன்னர்களால் அது இடிக்கப்பட்டதாகவுமான ஒரு வரலாறு நாம் சமகாலத்தில் அறிந்ததே.கொம்பன் கிடைத்ட அனுபவம் கூட இந்த புத்த விகாரையால்தன்.ஆதலால் சந்தேகமே வேண்டாம் கொம்பனுக்கு கிடைத்த அந்த வைப்ரேசன்,காளைக்கு போதி நிலை அடைந்தது.பிறவியெனும் பந்தம் அறுந்தது.

இவ்வளவு சுலபமாகவா என்றால் ஆம் இல்லை என்றால் இல்லை.

நாளடைவில் கொம்பன் புத்த விகாரே தவமாகக் கிடந்தது.

இப்படியாக ஒரு வாரம் செல்லவே காளையின் நடவடிக்கைகளில் நிறைய மாற்றம் இருந்ததை சக மாடுகள் கண்டு கொள்ள ஆர்ம்பித்தன.உணவு தேடியலைந்தது போக மற்ற நேரங்களில் சிதிலமடைந்த கோயிலின் முன் உட்க்கார்ந்து கண்களை மூடி தியானம் செய்வதும், (மாடுகள் கால்கள் பிண்ணி அமர்ந்து தியானம் செய்வது சாத்தியமில்லையென்றாலும் கொம்பன் தன் பின்னங்காள்களை தரையில் மடித்து உட்க்கார்ந்தும் முன்னங்கால்களை முகத்துக்கு நேரே நீட்டிக்கொண்டும் தியானம் செய்தது ஒன்றும் வியப்பில்லை, இதை கற்பனை செய்து பார்ப்பதற்க்கு வாசகர்கள் தடுமாறலாம் ஆனாலும் வேறு வழியில்லை இக்கதையின் கரு அப்படி).

சில நாள் நடுநிசியில் திடீரென தலை சிலுப்பி சன்னதம் கொண்டு ஆடுவதும்,எதாவது கேட்டால் மோன நிலையில் வாயோரம் புத்தரை போல மெலிதாக ஒரு புன்னகை புரிவதுமாக,காளை புன்னகை புரிகிறதென்றால் நம்ப முடியாமல்தான் உள்ளது ஆம் அது அப்படித்தான்.சக காளைகள் கொம்பனின் அருகில் வரவே தயங்கின.நாட்கள் உருண்டோட  மற்ற காளைகள் போல் கொம்பனால் இருக்கமுடியவில்லை, தனக்குள்ளேயே முனுமுனுத்துக் கொண்டு திரிந்தது.கேட்டால் மந்தகாசமாக ஒரு புன்னகை.

அதன் பிறகு எப்போதும் கூட்டத்தை விட்டு தனித்து செல்லவே விரும்பியது கொம்பன்.உணவு தேடும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் ஏதோ சிந்தனையிலேயே ஆழ்ந்திருந்தது,பசி எடுக்கிற சமயம் மட்டும் ஏன் எதுவும் சிந்திக்க தோன்றவில்லை என்றும் சிந்தித்து பார்த்தது,ஒன்றும் மட்டுப்படவில்லை.

ஒரு சமயத்தில் இது மாதிரி கோளாறான சிந்தனைகள் அலுப்பை உண்டாக்கியது,காரணம் இயற்க்கையின் உந்துதல்கள்,காளையேறி பல நாட்கள் ஆகிறது மறுபடியும் தன் கூட்டத்திலே சேரலாம்,மனிதனின் சுபாவங்கள் சிலவற்றை காளை தன் கூட்டத்திடம் பிரயோகித்து பார்க்கலாம் என்று நினைத்தது.

ஒரு நாள் நிசியில் சன்னதம் கொண்டு எழுந்து ஆடி சக மாடுகளை கூட்டி தனக்கு போதம் வந்துவிட்டதாகவும்.நான் சாதாரன காளை மாடு இல்லையென்றும் நான் உங்களின் மீட்பர் என்றும் அதை தன் கனவில் இறக்கையுடன் கூடிய இரண்டு கெடாரிகள் வந்து சொன்னதாகவும்,கூறவே முதலில் யாரும் நம்பவில்லை. சில இளங்க்காளைகள் சிரித்துக் கொண்டன. சில கன்றுகளும் அதன் தாய் பசுக்கள் மட்டும் பயத்துடன் கேட்டுக் கொண்டிருந்தன.

இருந்தாலும் காற்று கொம்பனுக்கு சாதகமாகவே வீசியது.

பின்னாளில் கொம்பன்  தன்னை  நம்பும் சில காளைகளையும் சில ஜெர்சி ரக பசுக்களையும் கூட்டி கோயிலின் அருகில் இருக்கும் அரசமரத்தடியில் பிரசங்கம் உபாசனைகளும் நடந்தேற்றியது.  நாளைடவில் பக்கத்து ஊர் நாட்டு பசுக்களுக்கும்  செய்தி பரவி கொம்பனை கேட்க்க வரும் கூட்டம் அதிகமாகிக் கொண்டே இருந்தது.மரத்தடியில் வெட்டவெளி ஆசிரமம் ஏற்படுத்தும் அளவிற்க்கு பிரசித்தி பெற்றது. கொம்பனான்டி என்றால் தெரியாத மாடுகளே கிடையாது சுற்று வட்டாரத்தில்.காளைகள் சிஷ்ய கோடிகளாக சேர்ந்து பணிவிடை செய்தன.இரவு நேரங்களில் சில உயர்ரக சிந்திப் பசுக்களை அழைத்து வந்து பஜனை நடந்ததாக வந்த செய்தி  கொஞ்சம் மிகையாக இருக்கலாம். செக்ஸ் ஆராய்ச்சி என்று சொல்லி சமாளிப்புகள் நடந்தன. எதிர்ப்புகளும் எழாமலில்லை.

சிறிது நாட்கள் இப்படியாக ஓடியது,ஆனாலும் உண்மையை  அறைகுறையாக  அறிந்தவன் உறங்கியதில்லை, கொம்பனுக்கு இந்த வாழ்க்கை முறையும் சலித்துதான் போனது, தான் தேடிப் புல் மேய்ந்து தினம் பல காளையேறி வெயிலேறி தகிக்கும் தார் சாலைகளில் சாணி போட்டு  உழன்று மடியும் இனமில்லை என்ற எண்ணம் சிந்தையை உலுக்கிக் கொண்டே இருந்தது.ஒரு நாள் தான் வடதிசை நோக்கி நான்கு கால்நடையாக பிரயாணம் போகப் போறதாகவும் தன்னுடன் வருபவர்கள் வரலாமென்று கூறவே சிஷ்ய மாடுகள் மறுக்க ஆசிரம பணிகளை அதுகளிடம்  ஒப்படைத்துவிட்டு கிளம்பியது.

வடதிசை பிரயாணங்களின் போது சில நாட்கள் பெருநகரங்களில் சுற்றியது. அங்கு உயிரினங்கள் வாழ தோதான சூழ்நிலைகள் இல்லையென்று அறிந்துகொண்டது.கண்ணுக்கு எட்டின தூரம் வரை புல்பூண்டையே காணும்,மனித இனம் மட்டும் எப்படி பிழைக்கிறது என்பது ஆச்சர்யமாகதான் இருந்தது,பின் மிகவும் பிரயத்தனம் செய்து அந்த உண்மையை தெரிந்து கொண்டது.அதை யாரிடமும் சொல்வதாக இல்லை.

வட திசை பயணத்தின் ஒரு நாளில் டெக்கான் பீடபூமியில் மார்கழி இரவுக் குளிரில் மனம் அலைபாயவே எழுந்து நான்கு கால் போனபோக்கில் நடந்தது. தூரத்தில் மூன்று இளங்காளைகள் ஒன்றை ஒன்று முட்டி விளையாடிக் கொண்டிருந்தன, அருகில் மங்கிய வெளிச்சத்தில் ஒரு பசு நிற்பது தெரிந்தது. வெட்டவெளி ஆசிரமத்தில் நாளைக்கு ஐந்து என்று ஏறிய காலமெல்லாம் இல்லை, போராடுவது சிரமம், பேசி மயக்கி வேண்டுமானால் பார்க்கலாம் மனித காளைகள் போல. "இது வேலக்கி ஆகாது" இருந்தாலும் முயற்சி செய்து பார்த்தது,சமாளிக்க முடியவில்லை,சிறு காயங்களுடன் தப்பித்து ஓரமாக வந்து நின்றது,ஒன்றும் பலனில்லை.பார்த்து ரசிக்க மட்டுமே முடிந்தது.

சிரித்துக்கொண்டே தோற்றுப்போன காளைகளோடு சேர்ந்து திரும்பி நடந்தது.மனிதனின் குணங்கள் தனக்கும் தொற்றிக் கொண்டதை நினைத்து வெட்கிய நேரம் முகத்தில் சுளீரென்று வெளிச்சம் அடித்தது. அதிலிருந்து இரண்டு மனித உருவங்கள் கரிய நிழல் போல தன் முன்னால் நெருங்கி வருவது தெரிந்தது.நெருங்க நெருங்க ஏதோ ஆபத்து வருகிறது என்று மட்டும் சூதாரித்து ஒரு முடிவுக்கு வந்த நேரம் கொம்பனும் மற்ற காளைகளும் ஒரு டெம்போ வேனில் ஏற்றப்பட்டு பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தன.பின் கொம்பன் ஒற்றைக் காளையாக குடோனில் அடைப்பட்டிருந்த தன் சக மாடுகளையெல்லாம் காப்பாற்றி வெளியே வந்ததெல்லாம் வேறு கதை.
                                                                                                   
அது நடந்த ஆகிறது பல காலம்.இந்த இருபத்தைந்து வருடங்களில் எங்கும் சுற்றி இறுதியில் ஆரம்பித்த இடத்திற்க்கே வந்து சேரத்தான் முடிந்தது.பழைய நினைவுகள் வருவதும் போவதுமாக இருந்தது. பின்னிரவு நேரம்,சாலைகளில் மனித நடமாட்டம் மங்கியிருந்தது,அப்போதும் கூட மனிதன் பிற உயிர்களை நடமாட விடுவது கிடையாது,சுளீரென்று முதுகில் அடி விழுந்தது காளைக்கு, பழக்கடையை மூடிக்கொண்டிருந்த கடைக்காரன் கத்தினான், துள்ளிக் கொண்டு சாலையின் அப்பக்கம் ஓடியது.எதை வைத்து அடித்தான் என்று தெரியவில்லை,அடித்த இடம் எரிந்தது.சாலையின் ஓரமாக சென்று பின்னங்கால்களை மட்டும் மடக்கி உட்க்கார்ந்து மூத்திரம் கால்களில் தெளிக்காமல் பெய்தது.எரிச்சலாக இருந்தது.ஹஸ்த பாதாங்குதாசனம் கற்றுக்கொண்டது வசதியாக போயிற்று. நிறைய தெரிந்துகொண்டுதான் இருந்தது இத்தனை வருடங்களில். பயணங்கள் என்றுமே அலுத்துபோனதில்லை இந்த காளைக்கு.

தன் இருபத்தைந்தாண்டு பயணங்களில் மனிதர்களின் நடவடிக்கைகள் ஆச்சர்யமூட்டுவதாகவே இருந்தது.மனித இனம் தன் இனத்தை விருத்தி செயவதை ஒரு தொழிலாகவே செய்வதை அறிந்து திகைத்தது.பசுவை ஏமாற்றி பால் கறக்கும் விதத்தையும் மேலும் பசுவை சிணை பிடிக்க வைக்க வெள்ளைக் கோட் போட்ட ஒரு மனிதன் ஊசி போன்று கையில் வைத்திருக்கும் தன் ஆண் குறியை பயன்படுத்துகிறானென்றும் அந்த குறியை எளிதாக தேவைப்படும் போது உபயோகித்து கொள்ளவும் குளிர்பெட்டியில் வைக்கவும் செய்கிறான் என்பதையும் அறிந்து மிரண்டு போனது.அதிகம் தெரிந்து கொள்வதும் ஆபத்தானதுதான்.

எல்லாம் தெளிவு பெற்றும் ஒரு குறை இருந்தது.அதுதான் மொழி ஆளுமை. பின் அது ஒன்றும் பெரிதாக தெரியவில்லை.சாட்சாத் சரஸ்வதி தேவியை நோக்கி பத்து திங்கள் ஒரு மலையடிவாரத்தில் தவம் இருக்கவே அந்த வரமும் கிடைத்துப் போனது. பின் சில பல மனித மொழிகளை  படிக்கவும் கற்றுக்கொண்டது. ஆய்வுக் கட்டுரைகள் எழுதும் அளவிற்க்கு இல்லை யென்றாலும் ஓரளவிற்க்கு புலமை பெற்றிருந்தது. அஃறினைகளுக்கு இது எப்படி சாத்தியம் என்று கேட்க வாசகர்கள் முயல வேண்டாம்,கதை ஒரு வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறது, விட்டு விடுங்கள்,அவ்வபோது குப்பையில் கிடைக்கும் நாளிதழ்கள், வார இதழ்கள் மூலம் மனித இனத்தின் நாட்டு நடப்பு செய்திகளை தெரிந்து கொண்டது. பின் ஹிந்தி, அங்கிலம் போன்ற மொழிகளும் எழுதப் படிக்க கற்றுக்கொண்டது. முதலில் ஹிந்தி கற்க நேரும்போது மனதுக்குள் ஹிந்தி எதிர்ப்பு துளிர்விட்டது.வேறு வழியில்லை தன்னைப் போன்ற நாடோடிகளுக்கு மொழி பேதம் ஏது, ஹிந்தி எதிர்ப்பை வெளிப்படுத்தி  அடையப்போவது ஒன்றுமில்லை.

உயிரியல் தத்துவங்களுக்கும் குறையில்லை.குப்பையில் கிடந்த பள்ளி மாணவனின் விடைத்தாளிலிருந்து டார்வின் கொள்கையையும் மனித உடலின் அனாட்டமியையும் அறைகுறையாக தெரிந்து கொண்டது.பரிணாம வளர்ச்சியின் பயனாக உயிரினங்களின் தலை,கை,கால்கள் ஆகியவற்றை தேவைக்கேற்ப நீட்டி,முழக்கி வடிவமைத்துக் கொள்ளலாம் என்பதை அறிந்து தன் கால்களை வளைத்து நெளித்து பார்த்தது. பின்னங்கால்களில் பாதி எழுந்து நின்று விட்டை போட்டுவிட்டு முன்னங்கால்களை பின்னால் வளைத்து தண்ணீர் ஊற்றி அலம்ப முயற்சி செய்து பார்த்து பின் இது அதீத கற்பனை என்பதையும் உணர்ந்து மனதுக்குள் சிரித்துக் கொண்டது.அந்த முயற்ச்சியை கைவிடாமல் தோதாக சில யோகாசன முறைகளையும் பழகிப் பார்த்தது.

நாட்கள் செல்ல செல்ல மெதுவாக புரியத் துவங்கியது தான் பரிணாம வளர்ச்சியின் ஆரம்பத்தில் இருக்கிறோம் என்று.தான் ஒரு காளை என்றும் அது மனித இனம் தங்களுக்கு பொதுவாக சூட்டிய பெயர் என்றும் தெரிந்து கொண்டது.

அவ்வபோது சில அரசியல் கட்சி கூட்டங்களையும் தொண்டர்கள் பின் ஒரு ஓரமாக உட்க்கார்ந்து கேட்க்க வாய்ப்பிருந்தது,எல்லாம் செய்தாலும் வயிற்றுப் போராட்டம் பெரும்பாடாகவே இருந்தது.சில நேரங்களில் உடல் பசிக்கு துணை தேடுவதும் அறிதாகவே நடந்தது.காலையேறி வருடம் இருக்கும், தியானம்,யோகாசன பயிற்சி  காரணமாக அதை துறந்தாகிவிட்டது, சில முறை கட்டுப்படுத்த முடியவில்லை. இது மாதிரி நேரங்களில் மனித இனம் தன் கைகளை பயன்படுத்திக்கொள்ளும் என்பதை ஒரு பருவ இதழில் கொம்பன் படித்திருந்தது.தனக்கு அந்த வசதி இல்லையென்று நினைக்கும் போது தாங்கொனா துயரில் ஆழ்ந்தது.

எத்தனை படிப்பிணைகள்,தன் வாழ்வு மற்ற காளைகள் போலல்லாமல் இனிதே முற்று பெற்றுவிட்டதாக உணர நேர்ந்தாலும் அநேக நேரம் நிம்மதி இழந்து தவித்தது. அது தூங்கிப்போன சிந்தையை எழுப்பிக் கொண்டே இருந்தது.

குடலில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்த உலோகத் துகள்கள் வயிற்றில் ஏற்படுத்திய அரவம் காளையின் குடலை அரித்துக்கொண்டே இருந்தது இன்னும் எத்தனை நாட்கள் என்று தெரியவில்லை.தான் சிந்தித்தவற்றை எப்படி அடுத்த தலைமுறைக்கு கொண்டுபோக போகிறோம் என்று நினைக்கையில் துயரம் உணவுக் கவளம் வைத்திருந்த தொண்டையை அடைத்தது.துயரத்தை அடக்கி கவளத்தை மறுபடியும் வாயில் கொண்டு சென்று அசைப்போட்டது.

எவ்வளவு நேரம் சாலையோரங்களில் குப்பைகளை மேய்ந்தாலும் பசி மட்டும் அடங்காதுபோல.எழுந்து மறுபடியும் நடந்தது.சுவற்றில் புதுப்பட போஸ்டர் ஒட்டியிருந்தது. அதில் இருந்த மனிதனின் உருவத்தை மிரட்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தது, அந்த போஸ்டரை அப்படியே விட்டுவிட்டு பக்கத்தில் "பருவ ராகம்" என்ற படப் போஸ்டர் ஒட்டியிருந்தது.அதை கிழித்து திண்று பசியை தீர்த்துக்கொண்டது. பசி அடங்கவில்லை, திரும்பி நடப்பது வீண்,காலையில் பார்த்துக் கொள்ளலாம்.சாதாரன காளையாக இருந்து கிடைத்ததையாவது அனுபவித் திருக்கலாம் என்ற எண்ணமும் வந்து போகாமல் இல்லை.முதலில் இந்த பாரத்தை இறக்கி வைத்தால் தேவலாம் போல் இருந்தது. மிதமாக வீசும் குளிர் காற்று என்னவோ செய்தது.சினிமா சுவரொட்டியை பார்த்ததிலிருந்து மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது.

ஊருக்கு வெளியில் சென்று பச்சையாக ஏதும் மேய்ந்து பார்க்கலாம் என்றாலும் போகப்போக நீண்டுகொண்டே செல்கிறது நகரத்தின் ஆக்கிரமிப்பு , அதற்க்கு பேசாமல் இங்கேயே கடைத் தெருவில் மீந்து போனது எதாவது கிடைக்கும். வாயிலும் கண்களிலும் நீர் ஒழுக அலைந்தது.தனக்கு இவ்வளவு ஞானம் கிடைத்தாலும் அதை வைத்துக்கொண்டு நாள் முழுக்க சிந்தனை செயவது தவிர வேறொன்றும் செய்வதற்க்கில்லை என்பதை நினைத்து மனம் வேதனை அடைந்தது. தூக்கம் வராமல் உலாத்தியதில் களைத்துப் போயிருந்தது.சுற்றும் முற்றும் பார்த்து உட்க்கார்ந்து மீண்டும் பழைய நினைவுகளை அசைப்போடத் துவங்கியது.
                                                 
                                                        ----தொடரும்----

Wednesday, 23 January 2013

'5சி' யும் நைந்து போனதோர் பயணமும்

வியப்பாகத்தான் இருக்கிறது,தோசையில் தூக்கமருந்து எப்படி இயற்கையாகவே இருக்கிறது என்பது, தின்றால் தூக்க வருமென்று இதற்கு முன்னரே கல்லூரியின் ஞாயிற்றுக் கிழமைகளில் அறிந்ததுதான் ஆனாலும்   இந்த நான்கு வருடங்களில் சில சுய பரிசோதனைகள் மூலம் நிறைய தெரிய நேர்ந்தது. அப்படித்தான் தோன்றுகிறது எப்போதும் ஒரு போதை நிலையில் இருப்பதும் சுகம்தான்.அதற்கு இந்த உளுத்தம் பருப்பும் அரிசிமாவும் கலந்து அரைத்து மாவாக்கி ஒருவாரம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து வைத்து எடுத்து சுட்டுத் தருகிற தோசையும் ஒரு காரணம்தான்.

தோசை மிக எளிதில் சுட்டுவிடலாம் ஒன்று, அரைத்த மாவை குளிர்சாதனப் பெட்டியில்  நான்கு அல்லது ஐந்து  நாட்களுக்கு மிகாமல் வைத்துக் கொள்ளலாம் இது போன்ற வசதிகளால் காலையும் இரவும் தோசை என்பது சிரமம் இல்லாதது என்று அம்மாவுக்கு தெரிந்தது எனக்கும் தெரிய வருவது ஒன்றும் பெரிய விஷயமல்ல.

வீட்டில் அம்மா அப்பா என்னைத் தவிற வேறு யாரும் இல்லை.அவர்களை சொல்லியும் ஒன்றும் ஆவதற்க்கில்லை,தினமும் விருந்து வைக்க உடல்நிலை ஒத்துக் கொள்ளாது,

"எத்தன நாள்தான் வடிச்சி கொட்டுவாங்க"

"பொன்னு பாத்து கண்ணாலம் பண்ணி வைக்கலாமானு கேட்டாக் கூட  ஒத்துக்க மாட்டேங்குற,என்னதான் முடிவுல இருக்கியோ,எப்டியோ போய் தொல"

வீட்டில வரும் கேள்விக்கு உடனடி பதில் கைவசம் ஒன்றும் இல்லை.

கல்யாணம் தேவையான ஒன்றுதான், ஆனால் அதைப் பற்றிய கற்பனையில் ஆழ்ந்த நிமிடமே மனம் சில புதிர்களை போட்டுக் கொள்கிறது.திருமணம் மனிதனின் கடைசி தேவையாக இருக்க முடியுமா என்று தோன்றிய கணம் மறுபடியும் குழப்பம். இதில் இவ்வளவு யோசிப்பதற்கு ஒன்றும் இல்லை, ஆனாலும் தற்சம்யம் முடிவெடுப்பது சிரமம்தான் .

தற்போதைய தேவை எதுவென்றும் அறியாமல் இல்லை ,ஏழு மலை, ஏழு கடல் தாண்டி போய் கிடைக்க கூடியதும் இல்லை, நெருங்கும் தூரத்தில்தான், கிடைத்தால் மிச்ச நாட்களில் வேறு பெரிதாக எதற்கும் ஆசைப்படப் போவதில்லை என்று கற்பூரம் அணைத்து சத்தியம் செய்யக்கூடிய அளவுக்கு அதில் நம்பிக்கை உள்ளது.பிறகென்ன ? இருப்பதை இழக்க நேரிடும் என்ற பயம்தான்,இருப்பது பெரிய புதையல் இல்லையென்றாலும் அந்த ஒரு புதையலை பாதுகாக்க வாழ்நாளில் பல தியாகங்களை செய்தாயிற்று. இழந்தது தானாக என்றாவது கிடைத்தால் வைத்துக் கொள்ள சிரமமில்லை.

        ஆனாலும் பழம் நழுவி  விழும்வரை காத்திருப்பது இயலாமை காரணம் என்று சொல்ல முடியாது,வேறு சிலவற்றை அடைய செய்த தியாகம்தான் என்று நாகரிகமாக சொல்லிக் கொள்ளலாம்.ஒன்றை இழந்து ஒன்றை பெறுவது எப்போதும் சுலபமாகவும், புத்திசாலித் தனமாகவும் தெரிகிறது.

இது இப்படி இருக்கையில் பகல் கனவவென்று ஒரு அற்புதமான விஷயம் அன்றாட நாட்களில் நிகழவில்லையெனில் சான்றோன் பட்டத்திற்கு ஆசைப்பட்டு இழந்த இன்பத்தின் கூட்டுத்தொகைகளை பெருக்கி அமைந்த உலகத்தை  தினமும் சாத்தியப்படுத்தி பார்ப்பது அவ்வளவு எளிதல்ல.ஆனால் முதலில் கனவு காண்பதை நிறுத்தனும்.அக்கனவு நேரடி காட்சிகள் தரும் அனுபவத்தை குறையச் செய்கிறது என்பது உண்மைதான்

                                                         ************

காட்சிகள் புலப்படத் துவங்கியதுமே,ஏழா நம்பர் புதுச்சத்திரம் பேருந்து நின்றது. இன்னும் பத்து நிமிடத்தில் வரும் 5சி பரங்கிபேட்டை வண்டி. மூன்று பேருந்துகள்  ஒன்றாக சேர்ந்து வரும்.பின் வருபவர்கள் ஒரு மணி நேரம் காத்திருக்க வேன்டும் அடுத்த பேருந்திற்க்காக, நம் அரசு இயந்திரம் அப்படி. இப்போதே வந்து கால் மணி ஆயிற்று. பேருந்துக்காக காத்திருக்கும் இந்த அற்ப நேரத்தில் எவ்வளவு சிந்தனை?

பத்து ஆண்டுகளில் நிறைய மாற்றம்,சிதம்பரம் முன்பு போல இல்லை,
வீக்கம் பெரிதாகி கொண்டுதான் இருக்கிறது.மக்களின் வாங்கும் சக்தி பெருகிக் கொண்டே இருப்பதாக கேள்விப் படுகிறேன். நுகர்வோராகவே மக்களை வைத்திருப்பது ஒன்றிரண்டு முதலாளிகளின் சாதனைகள் என்று தெளிவாகிறது.எத்தனை நாள் இப்ப்டி இருக்கமுடியும், உலகம் உய்ய நுண்ணுயிர்கள் முதலாக பகிர்வது அவசியம், உணவு சங்கிலி.'சும்மா இருக்குறதையெல்லாம் நாமளே எடுத்துகிட்டா எத்தன நாளைக்கு இங்க காலம் தள்ள முடியும்'.

இன்று வியாழன் சந்தை நாள் பேருந்தில் இடம் கிடைப்பது சிரமம்தான்.போய் சேர்ந்தால் எம்பிரான் கருனை.

அருகில் சிகரெட் பற்றவைத்து ஒருவர் ஊதிக்கொண்டிருந்தார்,இளைஞர்கள் யாரும் இப்போது பிடிப்பதில்லை, கிழவர் ஒருவர் மந்தகாசமாக இழுத்து ஊதிக் கொண்டிருந்தார், வேறு ஒருவராயிருந்தால் பிரகாசமாக எதாவது கருத்து தோன்றி  மறைய வாய்ப்புண்டு ,பாவம் இவருக்கு என்ன பிரச்ச னையோ' என்று நினைத்து  திரும்ப வேண்டியிருந்தது.

இது மாதிரி காத்திருக்கும் சமயங்களில் செல்போனை வைத்து நோண்டிக் கொண்டிருப்பது அல்லது  கையில் வைத்து உருட்டுவது ஒருவகையான உடல்மொழி யுத்தி. இந்த பேருந்து நிறுத்தத்தில் சில தினக் கூலிகள்,சந்தைக்கு காய்கறிக் கூடை வைத்துக் கொண்டு காத்திருப்பவர்கள் தவிர ஏனைய குடிமக்கள் அனைவரது கையிலும் செல்போன் இருப்பது ஒன்றும் வியப்பில்லை. இந்த சாதனத்தை தொழில் போட்டியின் காரணமாக ஒருவர் கண்டுபிடித்ததாக படித்திருக்கிறேன். தனிமனிதனின் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளில் இவ்வளவு தாக்கத்தை அது ஏற்படுத்த இந்த சிறிய காலம் போதுமாக இருந்திருக்கிறது. அவனுடைய கனவு எவ்வளவு பிரம்மாண்டமாக இருந்திருக்கும்.

இப்படி மறைந்திருக்கும் உண்மை தெரிய வருகையில், எங்கோ எவரோ ஒருவர் காணும் கனவின் விளைவாக நம் அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் நிச்சயப் படுத்தப் படுகிறது என்பது வியப்பை அளிக்கிறது.

                                                            *****************

இது கனவல்ல 5சி வந்துவிட்டது ,ஒரு மணி நேரப் பயணம், 5சி என்பது கால் மணி நேரத்தில் சென்று அடைய வேண்டிய தூரத்தை இருபது நிறுத்தங்களில் நின்று ஒரு மணிநேரம் பயணம் மேற்க்கொள்ளும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்க்கு சொந்தமான ஒரு கனரக வாகனம்.தொல்லை வேண்டாமெனில் தனியார் பேருந்து, தூக்கத்தை சிறிது நேரம் தியாகம் செய்து எழுந்து கிளம்பி முன்பாகவே காத்திருக்க்க வேண்டும், ஆனால் இனி எதையும் தியாகம் செய்வதில்லை என்று முடிவெடுத்தாயிற்று. கால் மணி நேரப் பயணம்தான், உயிருக்கு உத்தரவாதம் இல்லை, 5சி யிலும் இல்லை ஆனாலும் வேகம் குறைவு என்பதால்  சிறு காயங்களோடோ அல்லது கை கால்கள் இழந்தோ பிழைக்கலாம். எதாவது அரசு வேலைக்கூட கிடைக்கலாம் என்றாலும் தூக்கத்தை தியாகம் செய்யத் தயாரில்லை, நிச்சயமாக.

முந்தியடித்துக் கொண்டு ஏறியாயிற்று.ஆண் பெண் பேதமெல்லாம் இங்கு கிடையாது அழுத்தி உரசி,தள்ளி,பிதுக்கி முகத்தில் ஒரு முரட்டு முட்டியால் குத்து வாங்கி, இருக்கையில் அமர்ந்தாயிற்று,விடுவமா,பின்ன மூன்று வருட அனுபவம் சும்மாவா....பக்கத்து இடம் காலியாகத்தான் இருந்தது,தெரிந்த பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார், தினமும் இதே பேருந்தில் பயணிப்பவர்தான்,வங்கியில் பணிபுரிபவர்,என்னைவிட அதிக வயதுதான் ஒன்றும் யோசிக்காமல் உட்கார்ந்திருக்கலாம்,என்ன நினைத்தாரோ, பார்ப்பதற்க்கு பயமாக இருந்ததோ என்னவோ அதற்குள் இடம் நிரம்பியது. என்ன காரணம் என்று ஆராயத் தேவையில்லை. ஆனால் ஆண் பெண் என்ற ஒரு காரணம் மட்டும் இருக்கலாம் என பின் தோன்றியது.

என்னைப்போல் எத்தனையோ பயணியை பார்த்ததுதான் இந்த 5 சி, டீசலும் ஓட்டுனரும் இருந்தால் பயணம்,வாரத்தில் இரண்டு நாளாவது ப்ரேக் டவுன் வழியிலேயே, இருந்தாலும் காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறது, இதுபோல இன்னொரு 5சி பெயின்ட் அடிக்கப்பட்டு புதுப்பேருந்தாக அரசால் கணக்கு காட்டி உலாவருகிறதென்பதும் அறியாததில்லை, அதையெல்லாம் அவதாணித்துக்கொண்டேதான்  பயணிகிக்கிறது.

                                                                  ************

மெல்ல ஊர்ந்து சிதம்பரத்தை தாண்டுவதற்க்குள் 5 சி முழு கொள்ளளவை எட்டியிருந்தது.அதுவும் இன்று சந்தை நாள்.

பயணிக்க ஆரம்பித்த நாள் முதலாகவே நடத்துனரிடம் சில்லரையாகவே கொடுத்துதான் பழக்கம்,அப்படி ஒன்று இரண்டு ரூபாய் கொடுக்காவிட்டால் கூட கேட்பதில்லை,பணத் திமிறல்ல, திட்டாமல் வாங்கிக்கொண்டாரே என்ற நிம்மதிதான்.பின் இருக்கையில் இருந்த ஒரு பெரியவருக்கு வசை விழுந்தது,ஒருவேளை தினமும் சென்று வரும் பழக்கம் காரணமாகவும் நாகரிகமான உடை (என்னளவில்) காரணமாகவும் நான் தப்பித்து இருக்கலாம்.

வாழ்நாளில் சம்மந்தமே இல்லாமல் இருவருக்கு பயந்ததுண்டு,சின்ன வயசுல எனக்கு முடி வெட்டுறவர்,அடுத்ததா சில்லரைக்காக இந்த பேருந்து நடத்துனர். டவுன் பஸ் என்பதால் 5சி நடத்துனருக்கு ஓய்வு இல்லை, ஒரு நாள் பொழுதில் பேருந்துக்குள்ளேயே  அங்கும் இங்கும் இருபது கிலோமீட்டராவது பயணம் செய்யும் அதிசயப் பிராணி .

டூ விலரில் பயணித்தால் கால் மணிநேரப் பயணம்தான்.50 ரூபாய் பெட்ரோல் செலவு அவ்வளவுதான்.இந்திய தீபகற்பத்தில் பெட்ரோல் தேவையை குறைக்கவும் மாசில்லா சிதம்பரத்தை உருவாக்கவும் என்னால் முடிந்ததை செய்கிறேன் பேர்வழி என்று மூன்றாயிரம் போட்டு சைக்கிள் ஒன்று வேறு வாங்கி வருடம் ஆகிறது. பரம்பரை சைக்கிளான அட்லசையே தூசு தட்டி உபயோகித்திருக்கலாம், எளிமையானவர் என்று பிறர் சொல்வதற்கு நான் பிச்சைக்காரன் இல்லை என்பதை முதலில் நிருபிக்க வேண்டியுள்ளது. அதனால் புது சைக்கிள்.அதுவும் ஒரு மாதத்தோடு சரி.

                                                              ************

எந்த கியர் என்று தெரியவில்லை,ஒரு மாதிரியான கியரில் அமங்கள ஓசையெழுப்பிக் கொண்டு 5சி மணலூர் தாண்டி சென்றுகொண்டிருந்தது.

ஜன்னல் ஓரமாக உட்க்கார்ந்துகொண்டு காற்று வாங்கி ரசிக்கும் நிலையெல்லாம் இல்லை,அப்படி செய்து அதிகப்படியான மாசு நுரையீரலுக்கு சென்று ஒவ்வாமை ஏற்பட்டதுதான் மிச்சம்,அதுவும் டூ வீலரில் வண்டியில் செல்லும்போது முகத்தை மூடாமல் செல்ல முடியாது,கண் எரிச்சல் வேறு.உண்மையில் இது மாதிரி காற்றையும் தண்ணீரையுமே மாசுபடுத்தி வாழ்நாளை கடத்தும் வாழ்க்கையத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

உண்மையில்  மக்கள் சிந்திக்கிறார்களா என்பதே சந்தேகமாக இருகிறது,இன்னமும் தெளிவில்லை சமூகத்தில் தனித்துப் போவது யாரென்று.

பேருந்து அடுத்த நிறுத்தம்,வழக்கமாக ஏறும் நரிக்குறவர் கூட்டம்,மற்றவர்கள் போலவே இவர்களும் வார பரங்கிப்பேட்டை சந்தையில் காட்டில் கிடைத்த தேன்,நரிக்கொம்பு ,மணிகள் விற்பனை செய்வதுண்டு.இங்கு காடென்று ஒன்று உள்ளதா என்பதே சந்தேகம்தான்.ஏறியதுமே பேருந்தில் உள்ள இதர முகங்கள் அசிங்கத்தை கண்டதுபோல் சுளிக்க ஆரம்பிக்கும், ஏதொ புரியாத மொழியில் ஒலி எழுப்பி  பேசிக் கொள்வார்கள் அவர்கள் பேசும் மொழி என்னவென்று இன்றுவரை புலப்படவில்லை, யார் கண்டார்கள் தமிழைவிட பழமையானதாகக் கூட இருக்கலாம்,செம்மொழி கூட்டம் நடத்த இவர்கள் அரியணை ஏறினால்தான் சாத்தியம்.5சிக்கு இந்த மனித பேதம் கிடையாது ஆனால் அரியனையில் இருப்பவர்கள் 5சியில் ஏறியதும் கிடையாது.

அதில் ஒரு குறத்திப் பெண்ணை பார்த்திருக்கிறேன், பதினாறு வயது இருக்கலாம், பார்த்தால் கண் விட்டு அகலாது. அப்பெண்ணின் மீது சில நாட்கள் காதலில் கூட  விழுந்திருக்கிறேன், அவர்களின் மற்ற பெண்கள்போல் இல்லை, அழகு இருப்பதனாலோ என்னவோ பொதுவாக மற்ற நவநாகரிக பெண்களுக்கும் ஏற்படும் இயற்கைக்கு மாறான உடல்மொழி, இடைவெட்டி நடத்தல், கூந்தலை அடிக்கடி ஒதுக்குவது, ஒரு மாதிரியான கண்டுகொள்ளாத புன்னகை இந்தப் பெண்ணிடமும் இருந்தது வியப்பளிகவில்லை,கொஞ்ச நாட்களாகவே பேருந்தில் பார்க்கமுடிவதில்லை.

டூ வீலரில் சென்றால் இதுமாதிரியான அனுபவங்களை இழக்க நேரும் என்பதாலயே பேருந்து பயணம் என்பதும் ஒரு காரணம்.ஆனாலும் இது அலுத்துவிட்டது, செய்து பழகி நைந்து போன விஷயங்கள் சிந்தையை கவ்விப் பிடிப்பதில்லை.

                                                                ***********

பேருந்து படிகளில் நிரம்பி வழிந்து எழுபது டிகிரி கோணத்தில் சாய்ந்து கொண்டு சென்றது.இது தமிழக ஓட்டுனர்களுக்கே தெரியும் வித்தை.இந்த நிலையிலும்  படியில் தொங்கிக் கொண்டு வரும் பள்ளி மாணவர்கள். இடம் கிடைத்தாலுமெ அப்படித்தான்,இவர்களுக்கு இது ஒருவகையில் எதிர்பாலரின் கவனத்தை கவரும் உத்தி பெண்கள் மேக்கப் போட்டுக்கொண்டு இருக்கமான ஆடைகள் அணிந்து கவருவதுபோல்,தவறில்லை நியதியே அதுதானே, தடுத்து கட்டுப்பாடுகள் போட்டால் முடியுமா.ஆனாலும் ஆண்கள் காதில் தோடு போட்டுக்கொள்வது மட்டும் என்னால் ஏற்றுக்கொள்ள முடிந்ததில்லை, அதில் பெண்களுக்கு ஈர்ப்பு இருப்பதாக தெரியவில்லை.

புவனகிரி  தாண்டி ஊர்ந்து கொண்டு சென்றது 5சி.இதே நாள் போனவருடம் இருமருங்கும் ராஜ ராஜ சோழன் என்று பலகை நட்டு முற்றிய நெற்கதிர்கள் அறுவடைக்காக,இப்போது இல்லை.யாரையும் சொல்லத் தோன்றவில்லை.

வெகு நேரமாகவே என் பக்கத்தில் கிழவர் ஒருவர் நின்று கொண்டிருந்தார், இடம் கொடுக்க வேண்டுமென்றால் தியாகம் செய்தாக வேண்டும்,வேறு வழியில்லை, தர்மம தலைக்காக்கட்டும் என்று மனதை கட்டுப்படுத்திக் கொண்டு எழுந்திருக்க வேண்டியிருந்தது.

5சி யில் நின்று கொண்டு பயணம் செய்வது கருடபுராணத்தில் வரும் செய்முறை விளக்கமாக இருக்கலாம்.பேருந்தில் காய்கறி,மீன்,கருவாடு கூடைகளின் வீச்சம்  மனிதர்களின் வியர்வை நாற்றத்துடன் சேர்ந்த வேதியல் நிகழ்வின் காரணமாக  ஒரு வினோதமான கலவையான வாயுவை முகத்தில் பாய்ச்சியது போல் உணர நேர்ந்தது.

வங்கி ஊழியர் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டுதான் நின்று கொண்டிருந்தார், அப்போதே பக்கத்தில் உட்க்கார்ந்திருக்கலாம், இப்போது மூன்று பக்கமும் ஆண்கள் புடைசூழ நெருக்கி..

5 சி யில்நின்று கொண்டு செல்வதென்பது பூமியின் புவிஈர்ப்பு விசைக்கு மாறாக கூட்டத்தில் மிதப்பது போல்தான். கூட்டம் நெருக்கியது. எங்கிருந்தோ ஒரு பெண்மணியின் கொண்டை ஊசி கண்ணத்தை கீறி  குருதி தோய்ந்தது. இந்த கடினமான சூழ்நிலையிலும் நடத்துனரின் கைகள் எங்கிருந்தோ பாம்பு போல் நீண்டு வந்து சில்லரைக் கேட்டு பயணச்சீட்டு கொடுத்ததை பாராட்டாமல்  இருக்க முடியாது. திறமையானவர்தான், இல்லயென்றால் இந்த பாரத நாட்டில் பிழைப்பு நடத்த முடியுமா? ஆனால் இரண்டு பக்கமும் வாட்ட சாட்டமான பெண்மணிகளின் இடையில் மாட்டிக்கொண்டது இப்போதுதான் புரியத்துவங்கியது,இரு பக்கமும் உருளும் ரோலரில் மாட்டிக் கொண்டது போல்தான்.

                                                    ****************

முட்லூர் தாண்டி பரங்கிப்பேட்டை ரயிலடி நோக்கி சற்று சீரான வேகத்தில் சென்றது 5 சி.கடல் பக்கம் என்ப்தால் இங்கு சிறிது காற்று வாங்கிக் கொள்ளலாம்.

நல்ல வேளை,கிழவரின் இடம் வந்தது. ரயிலடியில் இறங்கிக்கொண்டார், இடம் மீண்டும் கிடைத்தது,உடல் ஒரு சுற்று குறைந்தது போல் இருந்தது திக்பிரம்மையாக இருக்கலாம்.அடுத்த நிறுத்தத்தில் கூட்டம் ஒருவாறு குறைந்தது.பக்கத்தில் இருந்தவரும் இறங்கவே தொம்மென்று விழுந்து பக்கத்தில் இருக்கையை பிடித்தார்  மீன்காரப் பெண். நகர்ந்து இன்னும் இடம் கொடுக்க வேண்டியிருந்தது, இருவர் அமரும் இருக்கையை முக்கால்வாசி பிடித்தாயிற்று.வியக்காமல் இருக்க முடியாது.

சந்தை நாட்களில் இவர்களை பார்ப்பதுதான்.சில நேரங்களில் அவதனித்திருகிறேன். வியாபாரம் நிமித்தமாக பயணிக்கிறார்கள், அல்லது அடிப்படை தேவையான சோறு, அதன் காரணமாக பயணம்.இவர்களின் உடையலங்காரம், அது இருப்பதாக உணருவார்களோ என்னவோ? தன்பாட்டிற்க்கு விலகி பாதி இடுப்பு வரை விலகி இருக்கும். வாயில் இருந்து வரும் வார்த்தைகள் தமிழ் அகராதியில் என்ன காரணம் பொருட்டோ  சேர்க்கவில்லை, வசைமொழி என்று தனித் தமிழ் அகராதியே போடலாம். நடத்துனரிடம் சகஜமாக இரண்டு அர்த்தம் தொணி க்கும் விதத்தில் வாக்குவாதம் நடக்கும்.

'என்ன கிராக்கிங்கடா இதுங்க,பெண் என்ற கட்டுப்பாடு இல்லை, ஆக்கங்க் கெட்ட பொம்பளைங்க'னு சிலர் சொல்வதுண்டு, அவர்கள் சொல்வதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. அப்படி சொன்னவர்களிடம் கேட்டிருக்கிறேன்.

'சார் இவங்கலாம் நாலு இடத்துக்க்கு போறவங்க,மூணு வேல திங்கனும்னா கட்டுப்பாடுலாம் பாத்தா முடியுமா,புருசன் நல்லா சம்பாதிச்சான்னா விட்டுக்குள்ளயே படிதான்டாம இருக்கலாம்'நம்ம மதங்கள் சொல்ற பொன்னுங்களுக்கான கட்டுப்பாடுகளை  கடைப்பிடிக்க  அவர்களின் அடிப்படைத் தேவை பூர்த்தியாகி இருக்கனும், சுருக்கமா சொல்லனும்னா பணம் வேணும் சார் "

'ஒழுக்கம்னு ஒன்னு  தேவையில்லையா,என்ன சார் பேசுறீங்க'

பேசிப் பயணில்லை,வீட்டில இந்தப் பெண்களுக்கு என்ன நிலைமையோ குழந்தைகள் படித்துக் கொண்டிருக்கலாம் அரசுப் பள்ளிகளில் அல்லது அவர்களும் வேறு தொழிலில் ஈடுபட்டிருக்கலாம்.புருஷன் இருக்கானோ அல்லது டாஸ்மாக் ஓரத்தில் விரை தெரிய ஆடை விலகி மயங்கிக் கிடக்கிறானோ. அன்று பயணம் செய்தால் சோறு. நாம் விவாதிக்கிற சில்லரை விஷயங்கள் இவர்களுக்கு பெரிது கிடையாது,

நவநாகரிகம் சொல்கிற பெண்சுதந்திரம் அதை இவர்கள் பேச தங்களிடம் மிகுதியான பணம் வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.ஆனால் நமக்கு இது பெரிய விஷயம்தான்.விரகம் வியாபாரமாகிப் போன விஷயம்.

                                                         **************

எனது பயணமும் மறைமுகமாக சோற்றுக்காகத்தான்,இல்லையென்று சொல்லிவிட முடியாது. ஒரு தேவைக்காக மற்றொன்றை தியாகம் செய்து கடக்கும் 'இருத்தல்' பயணம்.
                                           
ஆனால் 5சி எப்போதும் போல்தான் பயணிக்கிறது,முடிவு தெரிந்ததோர் பயணம். நின்றது , இறங்கிக் கொண்டேன்.இப்போது அது மீண்டுமொரு பயணத்திற்க்கு தயாராயிருந்தது  எத்தனைமுறை செய்தாலும் அலுத்துப்போகாத பயணம்.

பஸ்டான்ட் டீ கடைக்காரர் புன்னகையுடன் வரவேற்றார்,மூன்று வருடமாக பார்த்து பழகி பின் மெல்ல வெறியேற வைக்கிற புன்னகை,

"நாதாரி இன்னிக்காவது டீயில கொஞ்சம் பால ஊத்துடா"