Tuesday 4 February 2014

சராசரிகளும் ஒரு உரையாடலும்

உண்மையை சொல்லனும்னா அதை ஜீரணிக்கவே முடியல அதுவும் அதை அவன் வாயாலே சொல்லிக் கேட்டதுமே உள்ளே குமைய ஆரம்பித்து விட்டது, இனி இது தணிய எத்தனை நாள் ஆகுமோ? அது எப்டி இவனுக்கு, அதுவும் MBBS படிச்ச பொன்னு,காலக் கொடுமைடா, எவ்வளவு சாதாரணமா சொல்றான், அட இவன் அந்த பொன்னுக்கு தகுதியான ஆளா இருந்தாக் கூட பரவாயில்லயே, மனசு அமைதியாகிடும்,இவனுக்கு எப்டி, அதுவும் ஆறு வருஷ காதலாமே, இப்படியெல்லாமா கூட நடக்கும்.உள்ளுக்குள் இவ்வளவு புகைச்சலை கிளப்பிவிட்டு எந்த சலனமுமின்றி வாங்கிக் கொடுத்த சரக்கை ரசித்து ருசித்து குடித்துக் கொண்டிருந்தான் குமார்.சின்ன வயசு  நண்பன். ஐந்தாம் வகுப்பு வரை ஒன்னா படிச்சோம்.அதற்க்குப் பின் கூட சிறிது காலம் தொடர்பில் இருந்தோம்.

அன்னைக்கி ஞாயிற்றுக்கிழமைன்றதால நமக்கும் வேறு வேலை இல்லை இதற்க்கு முன் கூட இருந்ததில்லைதான்,நண்பனும் அவவாறேனு பார்க்கும் போதே தெரிந்தது அப்பவே மிதமான மப்புல இருந்தாப்டி.

எப்டி சொல்றதுனு தெரியல அப்போ என் கூட பள்ளி முடித்து கடைசி வரை சென்று வேலையில் உள்ளது சிலர்தான்.மற்ற அனைவருக்குமே பிடி இல்லை. அவர்களுக்கான ஏதோ ஒரு தருணத்தில் வழி தவறி போயிட்டாங்கனு தான் சொல்லனும்.அதுவும் குமார் நிறையவும் கெட்டுப் போயிருந்தான்.

கொஞ்ச நேரம் பழசுகளை சிலாகிச்சி பேசிட்டிருந்தோம். மகிழ்ச்சியான தருணங்களை நினைத்துப் பார்த்து அது தொடர்புடையவர்களோடு  பகிர்ந்து கொள்வது நன்றாகத்தானிருக்கும், ஆனா சந்தோஷம்ன்றது அரிதாகிப் போன நாட்களில்,நனவில் நிறைவேறாத சில ஆசைகள் எப்பயாவது அபூர்வமாக கனவில் நடப்பது போலக் காண நேர்ந்து பின் திடீர்னு விழிப்பு வந்து அடையும் ஏமாற்றம் மாதிரி நெஞ்சடைக்கும் இதுவும்,முடிந்து போன விஷயம் என்ற பிரக்க்ஞை திரும்பும்போது.

அன்னைக்குதான் அந்த ஜீரணிக்கவே முடியாத விஷயத்தை சொன்னான்.

'ரொம்ப நாள் கழிச்சி பார்க்குறோம்,ட்ரீட் உண்டா மச்சி'-குமார்

இல்லைனும் சொல்ல முடியாது, பேன்ட் பாக்கெட்ல பர்ஸ் பொடப்பா இருக்கறத பார்த்திருப்பான்.ஒரு காலத்துல ரொம்ப க்ளோஸ்,அந்த் நினைப்பு இப்பவும்கூட இருவருக்குமே மங்காமல் இருந்ததால்,பக்கத்து டாஸ்மாக்கில வாங்கி வாட்டர் மிக்ஸ் செய்து அங்கேயே ஊத்திக்கிட்டான்.இடையில் மொபைலில் யாரோ அழைக்க சற்று தள்ளிப் போய் பேசிவிட்டு வந்தான்.

திரும்பி வந்து 'நம்ம லவ்வர்  மச்சி' நான் கேட்க்காமலே அவனே சொல்ல ஆரம்பித்து,MBBS முடிச்சிருக்கறதாகவும்,+2 முதலே லவ்வுனும் சற்று சுருக்கமாக ஒரு கொசுவத்தி சுருள் ஓட்டி முடித்தான்.

ஆள் பார்க்கறதுக்கு குடியும் சிகரெட்டுமாக இருந்தாலும் பொதுவாக காதலிக்கிற ஆண்களின் பாவனைகள் குமாரிடமும் இருந்தாலும் கூட 'இவனுக்குலாம் எப்டி செட்டாகும்' என்ற தவறான தீர்க்க தரிசனம் இருந்து வந்ததும் மேலும் அப்டி ஒன்னும் பய பெர்ஸ்னாலிட்டிலாம் இல்லை என்பதாலும் ஒரு சமயத்தில் அதையும் கேட்க்காமல் இருக்க முடியவில்லை,

'எப்டி மச்சி இந்த விபரீதம் நடந்தது,நீ வேற சும்மா வெட்டியா இருக்க,அப்டியே இருந்தாலும் அந்த பொன்னு வீட்ல ஒத்துப்பாங்களா?'

'அதுலாம் ஒன்னும் மேட்டர் இல்ல,ஏற்கனவே ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணியாச்சு'ஆர்வத்துடன் அவனோட மொபைல் கேமராவில் ஜோடியாக எடுத்த அந்த பொன்னோட புகைப்படத்தைக் காட்டி'இவதான்டா மச்சி, உங்கிட்ட காட்டாம யாருகிட்ட காட்டப்போறேன்'.கேட்ட கேள்வி சுருக்குனு பட்டிருக்கும் போல 'எப்டி பொன்னு,மடக்கிட்டேன் பாத்தியா' என்பது போல தோரணை இருந்தது.

'ம்ம் வாழ்த்துகள் மச்சி'

கல்யாணம் பண்ணிக்கிறதா வேணாமானு குழம்பி ஒரு வழியா சரி பாருங்கனு வீட்ல ஒப்புதல் கொடுத்து பெண் பார்க்கும் படலம் தொடங்கி காட்டும் அத்தனைப் பெண்களின் புகைப்படங்களை விட பன்மடங்கு நன்றாகத் தானிருந்தது. 'காலக் கொடும, இவனுக்கா இப்டி'.

புகைச்சல் என்றும் சொல்ல முடியாது ஆனால் அதிர்ச்சி அடையாமலும் இருக்க முடியாது.சில கசப்பான உண்மைகள் தெரிய வரும்போது ஏற்படும் அதிர்ச்சி.இவனோட காதல் எவ்வளவுதூரம் போகும்ன்றது ஒரு பக்கம் இருந்தாலும் ஒரு பெண் வீட்டுக்கு தெரியாம ஒருத்தன கல்யாணம் பண்ணிக்கிற அளவு போறதும்,அந்த அளவு இவனை நம்பறதும்,அப்படி இவன்கிட்ட என்ன இருந்தது,என்ன கண்டுகிட்டா இவங்கிட்ட.

ஒரு பெண்ணால காதலிக்கப் படுறது எல்லா ஆமபளைக்குமே அது அவன் பிறந்ததுக்கான முதலான அர்த்தம்ன்ற உண்மையோ பொய்யோ,அதுவரை பெற்று வந்த அகஉலக அறிவு அதுமாதிரி தெளிவில்லாமல் உணர்த்தி இருந்ததாலும் நண்பனுக்கு அது இயல்பாக ஈடேறிவிட்டதாலும் அதனால் உண்டான கருகல் என் புற உலக அறிவின்மையைத்தான் தெள்ளத் தெளிவாக காட்டியது.

உண்மையில் இதை எப்படி புரிந்து கொள்ளனும்னு தெரியல.இல்ல இதுல புரியமுடியாத அளவுக்கு எதுவும் இல்லாமலும் இருக்கலாம்.ஆனா ஒன்னுமே இல்லைனு கண்டிப்பாக போக முடியாது என்றுதான் தோன்றுகிறது.

அதுவும் மருத்துவச்சி,தாங்கிக் கொள்ள முடியாதுதான். வெட்டிப்பய,குடி, சிகரெட்,ஹான்ஸ் எல்லாம் பழக்கமும் இருக்கு அவனுக்கு எப்டி இந்த பொன்னு?சிரிப்பாகவும் இருந்தது.அடப்பாவி அவன் உன்னோட நண்பன்டா, இப்டியா வயிறி எரிஞ்சி புலம்புவ.அதுதான் பிரச்சணை அவனும் என்னப் போலத்தான நா சுமார் மூஞ்சினா அவன் ரொம்ப சுமார் மூஞ்சி,மயக்குற அளவுக்கு ஆணழகன் கூட இல்லையே.இந்த சூட்சமம்லாம் புரிஞ்சிருந்தா நாமளும் பல ரவுன்ட் வந்திருக்கலாமோ அல்லது அது மாதிரி சூட்சமம்லாம் எதுவுமே அதில் இல்லையோ என்னவோ?

நமக்கும் தானே நடந்தது அது,கலைவாணி கூட நம்மகிட்ட நெருங்கிதானே வர முயற்சி செஞ்சா.நாமதான் அது ஏதோ பெரிய தப்புனு விலகி போயிட்டோம்.அப்போ இருந்த புரிதல அப்படி.ஆனாலும் ஆசை விடலயே நானும்தானே சைட் அடிச்சேன்.என்ன செய்யறது.ரெண்டு வருஷம் அப்டியே பார்த்துகிட்டே இருந்தோம்,அவளும் என்னென்னமோ செஞ்சா,நமக்கு தான் அது என்னனு புரியவே இல்ல,மக்கு,கடைசில 'போடா பொட்டை'னு சொல்லிட்டு போயிட்டா.எதுக்கு அப்படி சொன்னா நாம என்ன செய்யாம இருந்தோம்,பார்த்து சிரிச்சேன்,சிரிச்சேன்,வெறிக்க வெறிக்க பார்த்தேன், எங்க்கிட்ட முன்னாடி வந்து வேணும்னே குனியும்போது வச்ச கண் விலகாமலே பார்த்தேன் வேற என்ன செய்யனும்.

அவ என்ன நினைக்கிறானு எனக்கு எப்படி தெரியும்.சொன்னாத்தானே தெரியும்.ஆமா நானாவது சொல்லிருக்கலாம்.நான் எப்டி சொல்லுவேன் நான்தான் அது சரியா தவறானு புரிஞ்சிக்க முயற்சி செய்தே காலம் போயிடுச்சி.அட அவளாவது சொல்லிருக்கலாம் 'உன் கூட ஒரு நாள் படுக்கனும்'னு, சொல்லிருந்தா எப்படியாவது முடிச்சிருப்பேன்.ஆனா அந்த பொன்னு என்ன நினைச்சிருக்குமோ ஒரு வேளை என்னிடம் வேற எதாவது பரிவு,கணிவு இல்லை நவரச பாவணைகள் எதாவது எதிர்பார்த்திருக்குமோ என்னவோ? எப்டியோ அதை புரிந்து கொள்வதற்க்குள் கைமீறிப் போயிடுச்சி.

காதல்னு வேறு சொல்லுறான்.எப்படி காதல் வந்தது அந்த பொன்னுக்கு இவன பார்த்து.ஐய்யோ மண்டையே வெடிக்கிற போல இருக்கு.நானும் தான் காதலிச்சேன்.ஆனா எப்டி அந்த ஈர்ப்பு வந்தது.சொல்லவே அசிங்கமாத்தான் இருக்கு.அப்பவே எப்படி நாட்டுக்கட்டை மாதிரி இருந்தா அவ.அதை பார்த்துதான சொக்கிட்டேன்.எப்படியோ காதல் வந்து தொலைஞ்சிடுச்சி. அதைக் கூட க்ரிமினல் கேஸ் ஒன்னுல போஸ்ட் மார்டம் ரிப்போர்டுக்காக மாட்டிகிற பொனத்த அறுக்குற மாதிரி அந்தக் காதலை அறுத்துக் குழப்பி, புதைத்துப் பின் எழுப்பி ஒருவழியா அது காதல்தான்னு தெளியுற சமயத்துல எல்லாம் போச்சு.

வேற!!!!நினைத்து பார்த்தா நிறையவேதான் இருக்கு இதுபோல சம்பவங்கள்.குமார் அது மாதிரி ஒரு சம்பவத்த புரிந்துகொண்டு இல்லை அதில் அவ்வாறு சிந்தையை கசக்கி பிழியும் அளவில் ஒன்றுமே இல்லையென்ற மனோபாவம் இயற்கையாகவே இருந்ததால் அந்தப் பெண் அவனை விரும்பியிருப்பாளோ?

உலகத்தை சுத்தி வந்து ஞானப்பழத்தை பெறமுடியாது போன முருகனுக்கு என்ன மாதிரி வெறுத்துப் போயிருப்பாரோ அப்படித்தான் இருந்தது.அவனுக்கு மட்டும் அந்தப் பழம் கிடைத்தது எப்டி,அங்கிள் வயசு ஆகிப்போன சமயத்துல இந்த மாதிரி ஏமாந்து போனதாக வரும் எண்ணம் நல்லதுக்கில்லைதான்.அப்டி ஒன்னும் வயசு ஆகிடல பார்க்கலாம்.

பார்க்கவே ரவுடி மாதிரி இருக்கான்,நல்லா ஜாலியா வாழ்க்கையை கடத்துறான்.இதுலாம் தப்புனு ஒதுங்கி வீட்ல சொல்லிக்கொடுத்ததை அறம்னு நம்பி வளர்ந்து ஏமாந்து  புலம்பல் தான் மிச்சம்.நானாவது தேவலாம்,அந்த கேஸ் கம்பெனி ஓனர் பையன் ஒருத்தன் இருக்கானே,ஐயோ உலகமே தெரியாம இல்ல வளர்ந்திருக்கான் முப்பது வருஷமா,அம்பி மாதிரி, நாமளாவது இப்ப யோசிக்கிறோம், அவனுக்கு,சொன்னாலும் ஏதோ 'அபிஸ்டு,அபச்சாரம்'னு சொல்லிட்டு போவான்.அதுவும் நல்லதுதான் ஒருவகையில்.

இது நன்மை இது தவறுனு முன்கூட்டியே பழுக காய்ச்சி அடித்து அடித்து இறுக வைத்து விட்ட சூழ்நிலை நம்மளோடது.அப்டியே இருந்துட்டா பரவாயில்ல, உண்மைனு எதையோ இந்த மாதிரி தெரிஞ்சிக்கும்போதுதான் கடைசில என்ன இழந்தோம்ன்றது தெரிய வருது.தெரிஞ்சும் ஒன்னும் பலனில்லை,செக்கு மாட வெளிய அவுத்துவிட்டா சுத்தி சுத்திதான் வரும்.

குமாருக்கு இந்த கட்டுப்பாடு எதுவும் இல்லாமல் இருக்கலாம்,அதனால பிள்ளையார் கணக்கா ஞானப்பழத்தை எடுத்துகிட்டான்.

*****

சரக்கு முழுவதையும் குடித்துவிட்டும் நிதானமாகத்தான் இருந்தான் குமார்.

பாக்கெட்ல இருந்த சிகரெட் ஒன்ன எடுத்த பற்றவைத்து இழுத்தான்.

'நிறைய கெட்டுபோயிருக்க போல'அந்த கணத்தில் நினைத்து கொஞ்சம் பெருமையாகத்தான் இருந்தது,ஹான்ஸ்,சரக்கு பழகவில்லை என்பதான அற்ப காரணங்களால்.

'எப்டி ரவுடி மாதிரி தெரியுதா'

'கிட்டத்தட்ட'

'இல்ல மச்சி நிறைய பிரச்சணை'

'உனக்கு என்னடா பிரச்சணை,ஜாலியா இருக்க'

'உனக்கு தெரியாதுடா,வேல ஒன்னு வாங்கி தர்றேன்னு சொல்லி ஒருத்தன் ரெண்டு லட்சம் ஏமாத்திட்டான்,வீட்ல வேணாம்னு தான் சொன்னாங்க நாந்தான் சண்டை போட்டு கடன் வாங்கி...இந்தப் பிரச்சணை போதாதுனு போன மாசம் போதைல தெருல  மூஞ்சிய பேத்துட்டேன்,எப்படான்னு இருக்கானுங்க, 'கவலை தொணிக்கும் தோரணையில் பேசியது கொஞ்சம் வியப்பாகத்தான் இருந்தது.

நீ ஒன்னும் இதுக்குலாம் கலங்குற ஆளில்லயே மச்சி' செஞ்சதுக்கு வருந்தி பின்னாடி நினைத்து பார்க்காத எதுவும் தவறு இல்லைதான்.

'இல்ல மச்சி,வீட்டு பக்கம் போயே ரொம்ப நாளாச்சி,வீட்லயும் உள்ள விட மாட்றாங்க,+2 பாஸ் பண்ணவே நாலு வருஷம் ஆயிடுச்சி,அப்றம் இன்ஜினியரிங் சேர்ந்து, அதுக்குள்ள நா பார்த்த சின்ன பசங்கெல்லாம் வேலைக்கு வந்துட்டானுங்க, அப்போ எதுவும் தெரியல, படிக்கலனாக்கூட எதாவது தொழில் செஞ்சிட்டு இருந்திருப்பேன, எவன் மூஞ்சிலயும் முழிக்க முடியல' போதையேறிய கண்களோடு தன் வலிகளை சொல்லி, சிகரெட் புகையை வெளியே ஊதி,அவனுள்ளும் நானறிய வாய்ப்பில்லாத அல்லது புரிந்து கொள்ள முயற்சி செய்யாத துக்கத்தையும் சற்று ஊதி இலைபாற நினைத்தவன் போல மேலும் தொடர்ந்தான்.

'வீட்லயும் முன்ன மாதிரி இல்ல,எத்தனி நாளைக்குதான் அவங்களும் பொறுத்து போவாங்க, இந்த கஷ்டத்த மறக்க சரக்கு, அடிக்கலனா துக்கமே வரமாட்டேங்குது,ஒன்னு தெரியுமா? நா வீட்டுக்கு போய் ஒரு மாசம் ஆகுது, அக்கா வீட்ல காசு வாங்கி திண்ணுட்டு, குடிச்சிட்டு திரியுறேன்,எவனாவது மாட்டுவான்,நாள் ஃபுல்லா சரக்குதான்,போதை இறங்கனதுமே என்னோட நிலைமைய நினைச்சி பார்த்தா நெஞ்ச அடைக்குது,எப்படி உயிரோட இருக்குறேன்னே தெரியல மச்சி,நரக வேதனையா இருக்கு,இதுல வேற அந்த பொன்னு,என்ன செய்யுறதுனே தெரியல,நானே என்னோட லைஃப கெடுத்துகிட்டேன்னு தான் நினைக்கிறேன்' அவனோட வேதனைகளை சொல்லி என்னோட அர்த்தமே இல்லாத புலம்பல்களை இன்னும் அர்த்தமில்லாததாக்கினான். .

'அந்த பொன்னுக்கு இதுலாம் தெரியுமா டா'

'வேலை தேடிட்டு இருக்கேன்னு சொல்லி வச்சிருக்கேன்'

கொடும கொடுமனு இங்க வந்தா இங்க ஒன்னு தலைய விரிச்சி போட்டுக்கிட்டு டிங்கு டிங்குனு ஆடிச்சாம் அந்த மாதிரித்தான் இருக்கு.

'ம்ம் அவனவனுக்கு ஆயிரம் பிரச்சணை'

'சரி விடு அது என்னோட கஷடம்,அப்றம் உனக்கு கல்யாணம் எப்போ? முடிச்சிட வேண்டியதுதான'

'கல்யாணம் போயிட்டிருக்கு மச்சி,பாக்கலாம்'

'ஒன்னும் யோசிக்காத ,வீட்ல பார்க்குற பொன்ன பண்ணாத்தான் நல்லது,எந்த பிரச்சணையும் இல்ல,பின்னாடி எதாவது கஷட்ம்னாலும் கூட நிப்பாங்க' அவனடைந்த வாழ்க்கைப் பற்றிய புரிதல் அறிவுறையாக வந்தது.

'ஆனா நீ பரவால்ல மச்சி, ஞாபகம் இருக்கா அப்போ சின்ன வயசுல வீட்டுக்கு வருவ,பட்டை போட்டுக்கிட்டு,பொட்டு வச்சிக்கிட்டு,எங்க அம்மா உன்ன சொல்லித்தான் எனக்கு அட்வைஸ் பண்ணுவாங்க,அப்போ இதை உங்கிட்ட சொன்னது இல்ல,சொல்ல முடியல பொறாமையாவும் இருக்கும்,இப்பக் கூட உன்ன வீட்ல கேட்பாங்க,நானும் உன்ன மாதிரி அப்பலாம் செஞ்சி பார்த்திருகேன்,சாமி கும்பிடுவேன்,காலைல எழுந்து புத்தகத்தை எடுத்து வச்சிக்கிட்டு படிக்கலாம்னு ட்ரை பண்ணிருக்கேன் ஆனா என்னோட ஆர்வமெல்லாம் வேறயா இருந்துச்சி அதனால முழுசா செய்யமுடியல'எதோ ஒப்புதல் வாக்குமூலமாக சொல்லி முடித்தான்.

இவன் என்னடா இப்டி புலம்புறான்.அதையெல்லாம் நினைச்சி வெட்க்கபட்ட நாளெல்லாம் இருக்கு.

இவன மாதிரியே நம்மளால சொல்ல முடியுமா,"எப்டி மச்சி அந்த பொன்ன உஷார் பண்ண,சூப்பர்டா எங்கயோ மச்சம் இருக்கு மச்சி உனக்கு, நானும் ரெண்டு மூனு ட்ரை பண்ணேன் எல்லாம் மேட்டர் மச்சி,இப்ப சைட் அடிச்சா மொறைக்க பாக்குறாளுக டா,எல்லாம் காலம் கடந்து போச்சு"இப்டி சொல்ல முடிஞ்சா அது அவனோட புலம்பலுக்கு என்னோட சோடியா இருக்குமா தெரியாது.சொல்லலாம் தான்.ஊரு ஒத்துக்காது.

குமாரோட சூழ்நிலை வேறு கட்டுப்பாடு அதிகம் இல்லாத ஒன்று,காட்டு மிருகம் போல,நம்மளோடது மிருகக் காட்சி சாலை,ரெண்டு மிருகத்துக்கும் போராட்டம் இருக்கும்,காட்டுல அதோட இயற்கையான குணங்களோட ஒவ்வொரு வேளை உணவுக்கும் போராட வேண்டியிருக்கும்,கம்பிக்குள்ள இருக்குற மிருகத்துக்கு அந்த போராட்டம் இல்ல,ஆனா தன்னோட இணையை கண்ணுல காட்டாம ஊசி போட்டு கர்ப்பம் தெரிக்க வைக்கிற கொடுமை உண்டு,இந்த உண்மை எதுவும் தெரியாதிருந்து,சட்டம் வகுத்து வாழும் மனித சமூகத்தில் குமாரை வைத்து பார்க்கும்போது நம்மளோட புலம்பல்கள் ஒன்னுமே இல்லைதான்.

இல்லை இப்படியாகவும் இருக்கலாம்,அவரவரின் புரிதலில் தனக்குத்தானே போட்டுக் கொள்ளும் வட்டம் அதில் அமையும் சூழ்நிலைகள் பொறுத்து. சோதனைகள் இருவருக்குமே இருக்கும்தான்.துக்கமோ சந்தோஷமோ அதன் வடிவம்தான் வேறாக இருக்கும்,வீரியம் என்னமோ ஒன்னுதான்.

என்னவோ இன்னமும் புதிராகத்தான் இருக்கு.

'சரி மச்சி நீ என்கூட வீட்டுக்கு வா,உன் கூட வந்தா வீட்ல விடுவாங்க,வீட்ல உன்ன பார்த்தா ரொம்ப சந்தோசப் படுவாங்க' போதை அதிகமாகி நிலைகொள்ளாமல் தள்ளாடினான் குமார்.

'வேணாம் இன்னொரு நாளைக்கி வரேன்,நீ வேற தள்ளாட்ற,வண்டில ஏறு வீட்டு முனைல விட்டுடறேன்'

'மச்சி நீ எதும் சாப்பிடலயேடா,வா பெப்சி குடி,இருபது ரூபா இருந்தா தா' எங்கிட்டயே காசு வாங்கி கடையில் பெப்சி வாங்கினான்.பாதி குடித்துவிட்டு கொடுத்தேன்.அதையும் வாங்கிக் கொண்டான்.

'இன்னிக்கி ரொம்ப சந்தோசமா இருக்கேன்டா,பார்க்கலாம் மச்சி' கண்கள் சொருகி குரல் தடுமாறியது குமாருக்கு.

'பார்க்கலாம் மச்சி' அவன் சொன்னதை ஆமோதித்து திரும்ப சொல்ல தோணவில்லை,எனக்கே சந்தேகமாகத்தான் இருந்தது,தெளியவாவது செய்ததா என்றால் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment